Friday, June, 15, 2012இலங்கை::கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து தொடர்பில் பங்காளிக் கட்சிகள் சட்டநடவடிக்கை எடுக்கலாம் என்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர்.
மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அரசியலமைப்பை மீறி தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து அரசின் பங்காளிக் கட்சிகள் வேண்டுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பங்காளிக்கட்சிகளின் உரிமையில் தாங்கள் தலையிடப் போவதில்லை எனவும் அரசாங்கம் இது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு முன்னர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நிரலை கேட்காமல் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர் அனைவரும் அமர்ந்து நிகழ்ச்சி நிரலை தயாரிக்கலாம். முதலில் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதே முக்கியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
சம்மந்தன் அரசியலமைப்பை மீறி தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
அது தொடர்பில் அவர்களுக்கு இருக்கின்ற சட்ட அதிகாரத்தையும் உரிமையையும் நாங்கள் ஏற்கின்றோம். அதில் தலையிட நாங்கள் தயாரில்லை.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரிக்கப்படவேண்டும் என்று எமது பங்காளிக் கட்சி ஒன்று முன்னர் வழக்கு தாக்கல் செய்தது. தீர்ப்பும் கிடைத்தது. அதில் அரசாங்கம் தலையிடவில்லை. அதாவது அவர்களின் சட்ட உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். ஆளும் கட்சியில் சுதந்திரக் கட்சி பிரதான கட்சியாக இருந்தாலும் ஏனைய கட்சிகளின் உரிமையில் கைவைக்கமாட்டோம்.
இதேவேளை சம்பந்தனின் கூற்று தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும். சம்பந்தன் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திலும் இந்த விடயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினையாகும். குறிப்பாக 30 வருட கால பிரச்சினையில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. பலரும் இதுபோன்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயம் குறித்து நாம் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. அதாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்து இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற விடயங்களை மேலோங்க வைத்து அதனை பின்னடைவுக்கு உட்படுத்திவிடக்கூடாது என்பது மிக முக்கியமாகும்.
அதாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றில் பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சம்பந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை போன்ற விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்படலாம் என்றும் எண்ணுகின்றோம்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளோம். அந்த தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துவிட வேண்டும் என்று பாரிய முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். இவ்வாறான நிலைமையில் சில விடயங்களை விட்டுவிடுவது புதிய இணக்கப்பாடுகளுக்கு சிறந்ததாக அமையும்.
ஆனால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வருமா? வராதா? என்று எதுவும் உறுதியாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வரபோவதாகவும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் வரமாட்டோம் என்றும் கூட்டமைப்பு கூறிவருகின்றது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment