Thursday, April 5, 2012

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதி: எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளுக்கும் இடமளிக்க முடியாது இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு:ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, April 05, 2012
இலங்கை::பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இதற்கு சகல கட்சிகளையும் உள்ளடக்கும் விதத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. ஆனால், எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளுக்கும் இடமளிக்க முடியாது இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்படும் பரிந் துரைகளை முழுமையாக நூறுவீதம் அமுல்படுத்தி யதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக நேற்றுப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாத்ததிற்கு பதிலளித்துப் பேசும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றுப் பராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. அமைச்சர் தொடர்ந்தும் பேசுகையில், அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை ஊடாக இலங்கைக்கு பாதிப்பு உள்ளது. அதனை ஏற்றுக்கொள்கிறோம். இந்தியா அதற்கு ஆதரவு வழங்கியதாலும், பாதிப்புக்கள் ஏற்பட்டது. அதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தார்கள் என்பதற்காகவும், எமக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்க ளித்தார்கள் என்பதற்காகவும் இந்தியாவுட னும், அமெரிக்காவுடனும் நாம் பகைமை பாராட்டவில்லை. அவர்களும் எம்மோடு பகைமை பாராட்டவில்லை. இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் தூதரகங் களை மூடிவிடப்போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

எமது இராஜதந்திர உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆனால், புதிதாக வர்த்தக நடவடிக்கைகளுக்காக சில நாடுகளில் தூதரகங்களை திறக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எமது வளத்துக்கு ஏற்றவகையில் சில இடங்களில் தூதரகங்களை மூடி சில இடங்களில் புதியவற்றைத் திறக்கவுள்ளோம்.

சர்வதேச சமூகம் இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொண்டுவருவ தற்கு முன்னர் அந்த நாட்டுக்கே உரிய தீர்வுகளை, முன்னெடுப்புக்களை செய்வ தற்கான சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும்.

ஜெனீவாவுக்குச் சென்ற எமது குழுவினர் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டதாக ஒற்றுமையற்ற நிலையில் செயற்பட்டதாக சிலர் குற்றஞ்சுமத்தினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் தனித்தனியே நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து அதற்கேற்ற விதத்தில் இலங்கைக்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டிருந்தார்கள்.

ஜெனீவாவுக்குத் தலைமையேற்றுச் சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க விவாதத்தில் ஏன் வரவில்லையென்று சிலர் கேள்வியெழுப்பியிருந்தார்கள். அவர் உத்தியோகபூர்வ விஜயமாக உகண்டா சென்றுள்ளார். அதனால்தான் அவர் வரவில்லையென்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 8ஆம் திகதி கூடுகிறது. நேற்று பாராளுமன்றம் மாலை 6.30 முடிவடையும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமைதாங்கியிருந்தார்.

இந்தியாவின் தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பு - ஜீ.எல். பீரிஸ்!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தீர்மானத்தினால், இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானம் தவறானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தாய்நாட்டிற்கு வெளி அழுத்தங்களைப் பிரயோகிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment