Tuesday, April, 03, 2012சென்னை::சேது சமுத்திர திட்டத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேது சமுத்திரத் திட்டம் வந்துவிடக் கூடாது என்று தற்போது உள்மனதில் கெட்ட நோக்கோடு திட்டமிட்டு செயலாற்றும் அதிமுகவினர், 2001 அதிமுக தேர்தல் அறிக்கையில் இதே சேது சமுத்திரத் திட்டம் பற்றி என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா?
சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறப்பட்டது.
மீண்டும் 10,5,2004ல் வெளியிடப்பட்ட அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த திமுக, மதிமுக, பாமக கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அதிமுக வலியுறுத்தும் என்று கூறியிருந்தார்கள்.
இதற்குப் பிறகு தான் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வந்த நேரத்தில், அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்.
ஆனால் 16,4,2009ல் அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி இறுதியாகக் கூறப்பட்டிருப்பது என்ன? திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும், நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றெல்லாம் அதிமுக கூறி, இந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றார்கள்.
சேதுத் திட்டம் வேண்டுமென்று நாமெல்லாம் குரல் கொடுக்கின்ற நேரத்தில் மதத்தைக் காட்டி சிலர் எதிர்க்கிறார்கள், புராணத்தைக் காட்டி எதிர்க்கிறார்கள்; கடவுளின் பெயரைச் சொல்லி, அந்தப் பாலத்தை இடித்தால் நாட்டிற்கே ஆபத்து, இந்தியாவிற்கே ஆபத்து என்றெல்லாம் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்கள் நீதிமன்றம் செல்கிறார்கள்.
ராமர் பெயரால் உள்ள எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவா அந்தப் பாலம் வேண்டாமென்கிறோம். இல்லாத பாலத்தை இடிப்பதாக ஏன் பிரசாரம் செய்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம்.
தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து முடித்து விட்ட நிலையில் ராமர் பாலம் என்ற பெயரைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட நினைப்பது சரிதானா தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது தானா அறிவியல் ரீதியாக ஏற்புடையது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment