Tuesday, April, 03, 2012இலங்கை::ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன் போது இந்த பிரேரணை குறித்த இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாடு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த அறிக்கையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும், இதனால் இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எவையும் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்திருந்தார்.
எனினும் இது அமைச்சர் ஜீ.எல்.பீரிஷின் தனிப்பட்ட கருத்து என, அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ நிலைபாட்டை அரசாங்கம் விரைவில் வெளியிடும் எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டின் வெளியுறவுகள் துறை அமைச்சர் என்ற அடிப்படையில், தாம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவிருப்பதாக, அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசாங்க தரப்பில் இந்த பிரேரணை தொடர்பில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் ஜே. வி.பி கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஜே வி பியின்நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்த பிரேரணைக்கு எதிராக அரசாங்கம் ராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக செயற்படாமையைத் தொடர்ந்தே தற்போது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இது தொடர்பில் வௌ;வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த பிரேரணை குறித்த அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என தாம் கோரியதற்கு அமைய, இன்றும் நாளையும் இந்த விவாதம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் வெளியுறவுகள் துறை அமைச்சர் என்ற அடிப்படையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இன்றையதினம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை விளக்கமளிப்பார் என அமைச்சர் தினேஸ்குணவர்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவினால் ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஒன்று முன்வைக்கப்பட்டு, இன்றும் நாளையும் இந்த விவாதம் இடம்பெறுகிறது.
அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
வெளியுறவுகள் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் ஜீ.எல்.பீரிஷ் இன்றைய தினம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment