Pages

Friday, April 6, 2012

போரினால் பாதித்த மக்களை சந்திக்க அனுமதியுங்கள்:இலங்கை ஐகமிஷனரிடம் மனு - இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு!

Friday, April, 06, 2012
புதுடில்லி::போரினால் பாதித்த மக்களை சந்திக்க அனுமதியுங்கள்:இலங்கை ஐகமிஷனரிடம் மனு - இந்திய மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு உதவி செய்திடவும், சர்வதேச சமூகத்தை அனுமதிக்க வேண்டும்,' என கோரி, இலங்கை ஐகமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்திய மனித உரிமை பாதுகாப்பு என்ற அமைப்பின் சார்பாக, நேற்று டில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டில்லி தீன்மூர்த்தி பவன் அருகே, காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.பின்னர், இந்த அமைப்பின் நிர்வாகிகளான கிருஷ்ணமணி மற்றும் ராஜேஷ் கோங்கா உள்ளிட்ட சிலர் மட்டும், இலங்கை ஐகமிஷனர் கரியவாசத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

சர்வதேச சமூகம் கவலை:இலங்கையில் நடைபெற்ற போரின்போது, லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரும் இனப் படுகொலையான இதில், அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக உயிரை இழக்க நேர்ந்தது.
இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தலையிட்டு, அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை தவிர்த்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவ்வாறு நடக்காமல், எண்ணற்றோர் பலியானதற்கு ஆதாரமாக, பல தடயங்கள் வெளிவந்துள்ளன. இது, சர்வதேச சமூகத்தை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. அப்பாவி மக்கள் பலரும், அவர்களது வாழ்வாதார இடங்களை விட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள், உலக அளவில் வெளியாகியுள்ளன.
விரிவாக அலசல்;ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது, இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து, விரிவாக அலசப்பட்டு, சர்வதேச நாடுகள் தங்களது கவலைகளை பதிவு செய்துள்ளன.

புனரமைப்பு அவசியம்:இலங்கையின் வடக்கு பகுதியில், இனி நடைபெற வேண்டிய புனரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் விரிவாக தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பில், கையொப்பம் இட்டுள்ள நாடுகளில் ஒன்று இலங்கை. எனவே, தங்களது நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கைக்கு உள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துவிட்டாலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைத்து விடாது. அதே சமயம், அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும், பகுதிகளையும், மீண்டும் புனரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
தொண்டு நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும், அரசியலுக்கு அப்பாற்பட்டவை. எனவே, இவற்றை அங்கு அனுமதிக்க வேண்டும். புனரமைப்பு நடவடிக்கைகளில், இவற்øயும் பங்கேற்க செய்திட வேண்டும்.

அனுமதிக்க கோரிக்கை:இலங்கையில், உண்மையில் என்ன சூழ்நிலை என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில், அங்கு, சர்வதேச அளவில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளை அனுமதிக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வழி வகை ஏற்படும். இதன்மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி ஏற்படும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment