Pages

Wednesday, April 4, 2012

இந்திய-இலங்கை மீனவர்கள் ஒப்பந்தத்தை சீர்குலைக்க இலங்கையில் உள்ள ஒரு சில சக்திகள் சதி: உள்துறை அமைச்சர் சிதம்பரம்!

Wednesday,April,04,2012
சென்னை::தங்களது பிரச்னைக்கு தீர்வு காண, இந்திய - இலங்கை மீனவர்கள் என, இருதரப்புமே மிகுந்த ஈடுபாட்டோடு பேசி, பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, சுமுக ஒப்பந்தம் ஒன்றை எட்டிவிட்ட நிலையிலும், அதை நிறைவேற்றவிடாமல் இலங்கையில் உள்ள ஒரு சில சக்திகள் தடைக்கல்லாக நிற்கின்றன' என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் கடலுக்குள் மீன்பிடிக்கும் விஷயத்தில் பிரச்னை இருந்து வருகிறது. கடலில் எல்லையை தாண்டி மீன்பிடிக்கப் போவதாக, இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றன. இந்த எல்லை தாண்டும் பிரச்னையால், மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன; கைது சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இவை அனைத்தும் நீண்டநாள் பிரச்னையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து நேற்று உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

அரசு மட்டத்தில் பேச்சு :இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையில் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு இரண்டு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்று இந்திய - இலங்கை அரசுகளின் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு எட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இருநாட்டு அரசுகள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் வரம்பிற்குள், தமிழக அரசும் உள்ளது. பேச்சுவார்த்தையின் விவரங்கள் தமிழக அரசுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளப்பட்டே வருகிறது.

வரைவு ஒப்பந்தம் :அடுத்ததாக, இரு நாட்டு மீனவ அமைப்புகள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்டு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து பேசி, முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. அதன்படி எல்லையை தாண்டி, சில அடி தூரம் வரை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள்ளும், இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் சென்று மீன் பிடிப்பது தொடர்பாக சுமுக தீர்வுகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது குறித்த வரைவுநகலும்கூட தயாரிக்கப்பட்டது.

நிறைவேற்ற முடியவில்லை :கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த வரைவு ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டாலும்கூட, அதை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கு இலங்கையில் உள்ள ஓரிரு சக்திகள் உள்ளன. இந்த தடைக்கற்கள் தாண்டப்பட்டு, விரைவில் சுமுக தீர்வு எட்டுவதற்கு உண்டான முயற்சியில், இரு நாட்டு அரசுகளுமே முனைப்பாக உள்ளன. இவ்விஷயத்தில் ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வருகிறேன்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

No comments:

Post a Comment