Pages

Tuesday, March 27, 2012

திருடர்களா, கொள்ளைக்காரர்களா? எம்.பி.,க்கள் ஆவேசம்: அன்னா ஹசாரே குழுவினரைக் கண்டித்து பார்லிமென்ட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கோரிக்கை!

Tuesday, March 27, 2012
புதுடில்லி::திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கற்பழிப்பாளர்கள் என, சகட்டுமேனிக்கு தங்களைப் பற்றி அன்னா ஹசாரே குழு விமர்சனம் செய்திருப்பதைக் கண்டு, எம்.பி.,க்கள் கோபித்துக் கொண்டனர். இது முறையற்ற பேச்சு என்றும், பார்லிமென்ட் ஜனநாயகத்தையே அவமானப்படுத்தும் பேச்சு என்றும் கூறி, அன்னா ஹசாரே குழுவினரைக் கண்டித்து பார்லிமென்ட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

நேற்று காலை பார்லிமென்ட் கூடியதும் இரண்டு அவைகளிலுமே பிரச்னை வெடித்தது. லோக்சபாவில் கேள்வி நேரத்தை சபாநாயகர் மீராகுமார் எடுத்துக் கொள்ள முயன்றபோது, தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்காக எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். தவிர ராணுவ தலைமைத் தளபதி கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்காக பா.ஜ., எம்.பி.,க்களும் ரகளையில் இறங்கினர்.

தொடர்ந்த அமளி:இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென்று, இந்த எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையை நடத்த முடியாத சூழல் உருவாகவே, வேறு வழியின்றி கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது.பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, திரும்பவும் இதே பிரச்னை வெடித்து அவை அமளிக்காடானது. அமளி அதிகமாகவே, அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எம்.பி.க்கள் கண்டனம்:மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 2 மணியளவில் அவை கூடியபோது, மீண்டும் தெலுங்கானா பிரச்னை வெடித்து சபாநாயகர் இருக்கையை எம்.பி.,க்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் இட்டபடி இருந்தனர். இருப்பினும் இம்முறை உடனடியாக அவை ஒத்திவைக்கப்படவில்லை. மாறாக 15 நிமிடங்களுக்கு அவை அலுவல்கள் நடைபெற்றன. அப்போது, ஞாயிற்றுக்கிழமை அன்று ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத கூட்டத்தில் பேசிய ஹசாரே குழுவினர் எம்.பி.,க்களை மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசியதைக் கண்டித்து, அவையில் விவாதம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது :அன்னா ஹசாரே, பேராõட்டத்தின்போது எம்.பி.,க்களை கொள்ளைக்காரர்கள் என்றும், திருடர்கள் என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளனர். இது ஜனநாயகத்தையே அவமானப்படுத்தும் செயல் ஆகும். பார்லிமெண்ட் ஜனநாயகம் கண்ணியத்திற்குரியது. ஆனால் அவமதித்துப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. அவர் கைது செய்யப்பட்டபோது, அதை பா.ஜ., கண்டித்தது. இருந்தும் அந்தக் கூட்டத்தில் இவ்வாறு பேசப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார் .

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ்: எம்.பி.,க்கள் எல்லாம் வழிபறித் திருடர்களா? எங்களைப் பார்த்தால் கற்பழிப்பாளர்கள் போலவா தெரிகிறது. எம்.பி.,க்களைப் பற்றி மிகவும் மோசமாக, அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளனர். அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து வருகிறோம். ஆனாலும் இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் சரியானவை அல்ல. பார்லிமென்ட்டையும் ஜனநாயகத்தையும் கேவலப்படுத்தும் பேச்சுக்கள் இவை. இதுபோன்ற பேச்சுக்களை பேச்சாளர்கள் பேசும்போது அவர்களை அன்னா ஹசாரே கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யத் தவறிவிட்டார். இந்த பேச்சை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சஞ்சய் நிருபம் ( காங்கிரஸ்): அன்னா ஹசாரே, இதுவரை ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர் என்றுதான் நினைத்தோம். இப்போதுதான் தெரிகிறது அவர் பார்லிமென்டிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது. இதில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சந்தேகம் உள்ளது. நமக்குள் ஒற்றுமை இல்லாததாலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான், இதுபோன்ற பேச்சுக்கள் வருகின்றன,

பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்டு): "திருடர்கள் என்றும், கற்பழிப்பாளர்கள் என்றும் எம்.பி.,க்களை பேசுவது தரம்தாழ்ந்த பேச்சுக்கள். பார்லிமெண்ட் ஜனநாயகத்தை கேலி பண்ணும் செயல். இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.தெலுங்கானா குறித்து எம்.பி.,க்கள் ஏற்படுத்திய அமளிக்கு மத்தியில்தான் இவர்கள் அனைவருமே பேசினர். பேசி முடித்ததும் மேற்கொண்டு அவையை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்படவே வேறு வழியின்றி அவை நாள் பூராவும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் கேள்வி நேரம் முழுக்க ரத்து செய்யப்பட்டது. மதியத்திற்கு மேல் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

No comments:

Post a Comment