Pages

Monday, March 26, 2012

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணுசக்தி ஏற்ற தாழ்வு பாதுகாப்பானது அல்ல!

Monday, March 26, 2012
இஸ்லாமாபாத்::இந்தியா - பாகிஸ்தான் இடையே அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஏற்ற தாழ்வு இருப்பது பாதுகாப்பானது அல்ல என்று பாக். பிரதமர் கிலானி கூறினார். தென்கொரியா தலைநகர் சியோலில் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாடு இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க புறப்படும் முன்பு இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானி கூறியதாவது:
பாகிஸ்தானில் மின்சாரம் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அணுசக்தி தேவைப்படுகிறது. அது மட்டுமின்றி, அணுசக்தி தொழில்நுட்ப விஷயத்தில் இந்தியாவுக்கு சமமாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதற்காக அணுசக்தியில் பாகிஸ்தான் கவனம் செலுத்துகிறது. அணுசக்தியில் இரு நாடுகள் இடையே ஏற்றத் தாழ்வு இருந்தால் ஸ்திரமற்ற நிலை உருவாகும். வீண் பதற்றங்கள் ஏற்படும். அது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு கிலானி கூறினார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரபானி கர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷெரி ரகுமான் உடன் இருந்தனர்.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குறித்த அறிக்கையை அந்நாட்டு பார்லிமென்ட் கமிட்டி சமீபத்தில் வெளியிட்டது. ‘‘அமெரிக்கா & இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா & பாகிஸ்தானின் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம்’’ என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment