Tuesday, March 27, 2012

மீண்டும் தனி மாநில போராட்டம் வலுக்கிறது : தெலங்கானாவில் பந்த்!

Tuesday, March 27, 2012
ஐதராபாத்::ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி மீண்டும் போராட்டம் வலுத்துள்ளது. கோரிக்கையை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. தெலங்கானாவுக்கு ஆதரவாக எம்பிஏ மாணவரும், ஆட்டோ டிரைவரும் தீக்குளித்து தற்கொலை செய்ததால் பதற்றம் நீடிக்கிறது. அசம்பாவிதத்தை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலங்கானா பகுதியை சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. கடந்த ஆண்டு பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. தனி மாநில கோரிக்கைக்காக பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர். சிறிது காலம் ஓய்ந்திருந்த போராட்டங்கள் தற்போது மீண்டும் தீவிரமாகி உள்ளது.
தெலங்கானா பகுதியில் சமீபத்தில் நடந்த 6 தொகுதி இடைத்தேர்தல்களில் 5 இடத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்றது. இதையடுத்து தெலங்கானா போராட்டங்கள் மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் கூறினார். இந்நிலையில், வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்பிஏ மாணவர் போஜ்யா நாயக், கடந்த 24ம் தேதி தெலங்கானா மாநிலம் உருவாக்க கோஷமிட்டு தீக்குளித்து இறந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

வாரங்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பந்த் நடந்தது. அப்போது காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று அதே மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜமவுலி என்பவரும் தெலங்கானாவுக்காக தீக்குளித்து இறந்தார். மேலும் மகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் தீக்குளித்தார். அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனி மாநில கோரிக்கைக்காக தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தெலங்கானா போராட்டம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது.

ஆந்திர சட்டசபை வாசலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். தெலங்கானா தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபையிலும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் அவர்களோடு சேர்ந்து கூச்சலிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திலும் தெலங்கானா பகுதி எம்பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தெலங்கானா பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பாரதிய ஜனதா, தெலங்கானாவை சேர்ந்த அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு, தெலங்கானா பகுதியில் வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும் தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளும் அரசு பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. ஐதராபாத்தில் 10 ஆயிரம் நகர போலீசாருடன், மத்திய போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். சட்டசபை மற்றும் தலைமை செயலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்திரா, ராஜிவ் சிலைகள் உடைப்பு

தெலங்கானா போராட்டக்காரர்கள் தலைவர்களின் சிலைகளை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீக்குளித்து இறந்த ராஜமவுலியின் உடல் நேற்று மாலை வாரங்கலில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கில் தெலங்கானாவை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள், டிஆர்எஸ், பாஜ, தெலுங்கு தேசம், மாணவர் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் மற்றும் தெலங்கானா கூட்டுக் குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே இறுதி ஊர்வலம் நடந்தது. ஆனால் வழியில் இருந்த இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மற்றும் ஒய்எஸ்ஆர் சிலைகளை அடித்து நொறுக்கியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நூற்றுக்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment