Pages

Monday, March 26, 2012

வழக்குகளை வாபஸ் பெற்று பேச்சுவார்த்தை நடத்த உதயகுமார் நிபந்தனை!

Monday, March 26, 2012
கூடங்குளம் போராட்டம் இன்றுடன் 8வது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று மத்திய மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்தினால் உண்ணாவிரதத்தைக் கைவிடலாம் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இந்திய மக்களாகிய எங்களை நக்சலைட்டுகளுடன் தொடர்புபடுத்தி, தேசத்திற்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக கூறுவதை கண்டிக்கிறேன். இந்த போராட்டத்தை நாங்கள் கைவிட வேண்டுமெனில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அத்தனை வழக்குகளையும் நீக்க வேண்டும். எங்களுடன் மத்திய அரசும், மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி.யும் எங்களை நிறைய முறை சந்தித்திருக்கின்றனர். நாங்கள் தமிழக முதல்வரை 2 முறையும், பிரதமரை 1 முறையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டதிலிருந்து மத்திய குழுவோ, மாநிலக் குழுவோ எங்களை சந்திக்கவில்லை.

என்று உதயகுமார் கூறினார்.

தொடர் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான மில்ரெட் என்ற பெண்ணின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.

ஆகையால் அந்த பெண் உண்ணாவிரத பந்தலில் இருந்து இடிந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மற்ற 14 பேர் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் சோர்வுடன் உண்ணாவிரத பந்தலில் படுத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவை நீக்க கோரும் மனு தள்ளுபடி!

கூடங்குளம், இடிந்தகரை பகுதிகள் அமைந்துள்ள ராதாபுரம் தாலுகாவில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடையுத்தரவை ரத்து செய்ய கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்த பிறகு அங்கு வெளியாட்கள் வருவதை தடுக்கவும், போராட்டத்தை கட்டுப்படுத்தவும், ராதாபுரம் வட்டாரத்தில் 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது.

இந்த உத்தரவை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மாநில அமைச்சரவை தீர்மானம் எடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment