Pages

Sunday, March 25, 2012

நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் - இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ன!

Sunday, March 25, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்களை கொண்ட குழுவினரது அறிக்கை கிடைக்க பெற்றதன் பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்படும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"வெளிநாடுகள் கேட்டுக்கொள்வதற்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த பரிந்துரைகளை மூன்று விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளில் எதனை நடைமுறைப்படுத்துவது, இவைகளை நடைமுறைப்படுத்துவதால் இலங்கைக்கு ஏற்படும் நன்மை தீமை மற்றும் இதன் மூலம் சர்வதேசத்துடன் எவ்வகைகளில் தொடர்புகளை பேணுவது என்பனவே அந்த மூன்று விடயங்களாகும்.

இவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தததன் பின்னரே ஆணைக்குவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்" என்றார்.

இந்நிகழ்வில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment