Friday, February 03, 2012சென்னை::கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத்தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி, ‘‘இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.’’ என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும்; 1974 ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி ‘‘கச்சத்தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு, நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’’ என்று கடிதம் அனுப்பியும்; திமுக ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும்
இருக்கிறோம். மேலும், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங், 1974-ல் கருணாநிதியை சென்னையில் சந்தித்த போதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் கருணாநிதி நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்; கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திமுக, இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2011 தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின்போது, திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும்,
1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டின் உரிமைகள் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் “திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக, அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில்; கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை
இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு திமுக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
* மேலும் குமரிமுனையில் உள்ள வள்ளுவர்சிலை பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* பிற்படுத்தப்பட்டோர் நிலைக் குழுவை அமைத்திட மத்திய அரசுக்கு வேண்டுகோள்.
* மின் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும்.
* சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று உடனடியாக மக்கள்நலப் பணியாளர்களுக்குப் பணி வழங்கிட வேண்டும்.
* புதிய தமிழகத் தேர்வாணையத் தலைவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
* கரும்புக்கு டன் ஒன்றுக்கு விலையாக ரூ.3000 வழங்க வேண்டும்.
* தமிழை மத்திய ஆட்சிமொழியாக்கிட வேண்டும்.
* கட்டிட இடமாற்றம் என்ற பெயரில் மூடுவிழா செய்வதை விடுத்து ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுகோள்.
* “தானே” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் துயர்துடைக்கும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* தமிழக விவசாய பெருங்குடி மக்களின் இன்னல்களைக் களைய வேண்டும்.
* பால் விலை உயர்வு - பஸ் கட்டண உயர்வு - திரும்பப் பெற வேண்டும்.
* மஞ்சள் விலை வேகமாகச் சரியாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.
* தமிழக ரயில்வே திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* தேசியப் பாடநூல் கழகம் அமைக்கும் திட்டத்தினைக் கைவிட வேண்டும்.
* தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்க்க முனைய வேண்டும்.
* செவிலியர்களின் ஊர்வலத்தின்மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை தாக்குதலுக்குக் கண்டனம்.
* வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
* கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சினையில் விரைவில் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
பொய் வழக்குகளை எதிர்த்து போராட்டம் : திமுக தீர்மானம்!
சென்னை: எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளையும், பொய் வழக்குகள் போடுவதையும் அதிமுக அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் திமுக அறப்போராட்டங்களை நடத்தும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கியது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எம்.பி. கனிமொழி, முன்னாள் மாநில அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, பொன்முடி, எ.வ.வேலு, நேரு, பெரியகருப்பன், சுரேஷ்ராஜன், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாணசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், சுதர்சனம், தா.மோ.அன்பரசன், பெரியசாமி மற்றும் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை நடந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன் இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவ ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். செம்மொழி தமிழாய்வு மையம், நூலகத்தை தமிழக அரசிடம் இருந்து காப்பாற்ற அந்த மையத்துக்கு புதிய நிர்வாக குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நிலைக்குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். மின்வெட்டால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அதிமுக அரசு மேற்கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். எனவே, கட்டண உயர்வுக்கான திட்டத்தை கைவிட வேண்டும். ஐகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் அமர்த்த வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ளவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்தும் பொய் வழக்குகள் போடுவதில் இருந்தும் காவல்துறையினரை விடுவித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட செய்ய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால் திமுக அறப்போராட்டங்களை நடத்தும்.
தேர்தல் நேரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட கூடியவர் என்று ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர் தமிழக தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். கரும்புக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்க வேண்டும். 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேண்டிய நிவாரண பணிகளை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும். பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கையை எண்ணிப் பார்த்து, தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அறப்போராட்டம் நடத்தும்.
தமிழக மக்களுக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் நாட்டு நலனை முன்னிறுத்தி மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்:-
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.பி.சற்குண பாண்டியன், துரைமுருகன், வி.பி. துரைசாமி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், காந்தி செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, இளங்கோவன், ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பூங்கோதை, கே.மாதவன், முத்துசாமி, செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, ரங்கநாதன் எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., இலக்கிய அணி நிர்வாகிகள் கூத்து முருகன், பாண்டிசெல்வம், மற்றும் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நடிகர் வாகை சந்திரசேகர், நடிகை குஷ்பு, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் பங்கேற்ற மு.க.அழகிரி பகல் 12.30 மணி அளவில் புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment