Pages

Wednesday, February 8, 2012

அத்வானி பாதையில் வெடிகுண்டு இருவருக்கு நிபந்தனை ஜாமின்!

Wednesday,February,08,2012
மதுரை:திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில், வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட வழக்கில், கைதான இருவரை நிபந்தனை ஜாமினில் விட, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இருவரும், தலா கிரேடு 1 அரசு அலுவலர் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் பிணையம் அளிக்கவும், நிபந்தனை விதித்தது. மதுரையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு, மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரையை, கடந்த செப்டம்பரில் அத்வானி மேற்கொண்டார். அவர் செல்லவிருந்த, திருமங்கலம் - ஆலம்பட்டி ஓடைப்பாலத்தில், பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரிக்கின்றனர்.

முக்கிய குற்றவாளிகளுக்கு, ஆட்டோ மற்றும் பைக் கொடுத்து உதவியதாக, அப்துல்லா, இஸ்மத் ஆகியோரை, அக்., 2ல் சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இருவரும், ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கைதாகி 90 நாட்களாகியும், குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்யாததால், ஜாமின் வழங்கக்கோரி, திருமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இருவரும் மனு செய்தனர். மனு, மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ஜான் சுந்தர்லால் முன் விசாரணைக்கு வந்தது.

இருவரையும் ஜாமினில் விட வேண்டும் என, வழக்கறிஞர்கள் மனோகரன், சீமான் வாதாடினர். ஆட்சேபம் தெரிவித்த அரசு உதவி வழக்கறிஞர் முகமது சிக்கந்தர் துல்கர்னி, "இத்தகைய வழக்குகளில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட், ஜாமினில் விடுவிக்கப்படுவோர் கிரேடு 1 அரசு அலுவலர் பிணையம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மனுதாரர்களும் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்றார். முடிவில், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய மாஜிஸ்திரேட், இருவரும் தலா கிரேடு 1 அரசு அலுவலர் மற்றும் ரத்த உறவினர் பிணையம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment