Pages

Friday, February 10, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது!

Friday, February 10, 2012
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்களசமரவீர, ஜெயலத் ஜெயவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்...

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவது தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் அடிப்படை அம்சமொன்றை கொண்டிருப்பது சிறந்தது எனவும் இல்லாவிட்டால் இப்பேச்சுவார்த்தை மிக நீண்ட பயணமாக அமைந்துவிடும் எனவும் ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.

அரசாங்க – த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தபூர்வமாக அமல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்குவது நல்லது எனவும் ஐ.தே.க. கூறியுள்ளது.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கடினமான தீர்வை எதிர்பார்க்கவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், யதார்த்தமான, நிலைத்துநிற்கக் கூடிய தீர்வையே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் த.தே.கூட்டமைப்பு இச்சந்திப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment