Friday, February 10, 2012இலங்கை::இருபதாயிரம் ரூபா இலஞ்சத் தொகையைப் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் ஹம்பேகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஒருதொகை கஞ்சா போதைப் பொருள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாது அதனை விடுவிப்பதற்காக இந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரண ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
பலாங்கொடை கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமே இவர்கள் இலஞ்சத் தொகையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹம்பேகமுவ பொலிஸ் நிலையம் மற்றும் ஹம்பேகமுவ சிவில் பாதுகாப்புப் படை அலுவலகம் ஆகியவற்றில் சந்தேகநபர்கள் சேவையாற்றி வந்தனர்.
இலஞ்சம் பெற்ற மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது!
இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய நடைமுறைக்கு மாறாக வாகனமொன்றை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றுவதற்கென குறித்த அதிகாரி ஆறாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிக்கு உடந்தையாக இருந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சந்தேகநபரான விசாரணை உதவியாளரை கைது செய்யும் போது அவரிடம் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பணம் எவ்வாறு அவருக்கு கிடைத்தது என்பது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, குளியாப்பிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறு பிள்ளையொன்றின் இறுதிக் கிரியைகளை அரசாங்க செலவில் நடத்துவதற்காக இரண்டாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த பிள்ளையின் தந்தையிடமிருந்து இன்று பகல் இலஞ்சத்தை பெற்றுக்கொண்ட போது சிற்றூழியர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அநுராதபுரம் ஒயாமடுவையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு போதைபொருள் உட்கொண்ட நிலையில் சென்ற 35 பேர் கைது!
அநுராதபுரம் ஒயாமடுவையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகத்தினுள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் சென்ற 35 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கண்காட்சிகூட வளாகத்தினுள் போதையில் செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் 35 பேரும் மதுபானம், கஞ்சா, அபின் உட்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்ட நிலையில் சென்றபோது, கண்காட்சி வளாகத்தினுள் இயங்கிவரும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டு ஒயாமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின் இவர்கள் 35 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஒயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment