Pages

Sunday, February 5, 2012

புதிய சம்பள விகிதம் வலியுறுத்தி பெப்சி தொழிலாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

Sunday, February 05, 2012
சென்னை::தயாரிப்பாளர்களிடம் புதிய சம்பள விகிதம் வழங்க கேட்டு பெப்சி தொழிலாளர்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. தயாரிப்பாளர்கள் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி புதிய சம்பள விகிதம் நிர்ணயிக்கவில்லை. எனவே, தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு தெரிவித்தது. இதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. ‘பேச்சுவார்த்தை நடத்திதான் சம்பள விகிதம் நிர்ணயிக்க வேண்டும். பெப்சி தன்னிச்சையாக சம்பளம் நிர்ணயித்துள்ளது. அதை ஏற்க இயலாது’ என்று தயாரிப்பாளர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து பல படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்தவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் உள்ளனர். இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கவும், புதிய சம்பளம் வழங்க கோரியும் பெப்சி தொழிலாளர்கள் சென்னை வடபழனி நூறடி சாலையில் உள்ள தங்களது அலுவலக வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. அகில இந்திய திரைப்பட சம்மேளன தலைவர் தர்மேஷ் திவாரி தலைமை தாங்கினார். பெப்சி நிர்வாகிகள், இயக்குனர் அமீர் மற்றும் 5 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதுபற்றி பெப்சி பொதுச் செயலாளர் சிவா கூறும்போது, ‘எங்களது நியாயமான சம்பள கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் நிறைவேற்ற கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது’ என்றார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரத முடிவடைகிறது. இதற்கிடையே, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. அப்போது பேட்டி அளித்த சங்க தலைவர் பாரதிராஜா ‘பெப்சி, தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள சம்பள பிரச்னையில் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இயக்குனர்கள் குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே நடுநிலைமையுடன் செயல்பட்டு பிரச்னைக்கு தீர்வு காண உதவுவார்கள்’ என்றார்.

No comments:

Post a Comment