Pages

Sunday, February 12, 2012

வேளாங்கண்ணி அருகே பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 50 நாட்களுக்கு பிறகு விடுவிப்பு!

Sunday, February 12, 2012
புதுச்சேரி::இந்தியக் கடல் எல்லையில், அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு, புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள், 5 பேர் விடுவிக்கப்பட்டு, நேற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேளாங்கண்ணி அருகே, இந்தியக் கடல் எல்லையில், 8 கடல் மைல் தூரம் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்தியக் கடலோரக் காவல் படையினர், கடந்த டிசம்பர் 15ம் தேதி கைது செய்தனர்.இவர்கள், புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து, இலங்கை அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவர்களைப் பற்றிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. தங்கள் நாட்டு மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

இலங்கை மீனவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், கடந்த மாதம், புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், இலங்கை மீனவர்கள் மீதான வழக்கை, மாநில அரசு வாபஸ் பெற்றது.இலங்கை மீனவர்கள் நாடு திரும்ப, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்தது. இலங்கை அதிகாரிகள், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்து, தங்கள் நாட்டு மீனவர்களையும், தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களுடைய விசைப்படகையும் பார்வையிட்டு, அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தனர். இன்று (12ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு, விமானம் மூலம், இலங்கை செல்கின்றனர்.

No comments:

Post a Comment