Sunday, February 12, 2012சென்னை::சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமின் 50ம் ஆண்டு பொன் விழாவையொட்டி, செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் துப்பாக்கி சுடுகள மைதானத்தில், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை, பயிற்சி மையத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஜோக் தொடங்கி வைத்தார். முதலாவதாக, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சாகசம் செய்து காண்பிக்கப்பட்டது. அந்த வகையில், விமானம் மூலம் 12,000 அடி உயரத்தில் இருந்து 6 வீரர்கள் குதித்து, 3 நிமிடத்தில் தரையிறங்கினர். இரண்டாவதாக, பாராசூட்டில் இருந்து குதித்த 7 வீரர்கள், தேசியக் கொடி போன்று நடுவானில் சாகசம் நிகழ்த்தினர். இதைத்தொடர்ந்து, பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.
பின்னர், விமான படை மற்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன போர் கருவிகளான மிஷின் கன், ஏ.கே.47, ராக்கெட் லாஞ்சர், மோட்டார் லாஞ்சர், எஸ்.எல்.ஆர், கை துப்பாக்கி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்துவது பற்றியும், 100, 200, 500 மற்றும் 3 கி.மீ. தூரம் துல்லியமாக தாக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியும், செயல்முறை விளக்கம் அளித்தனர். பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். போர் நடக்கும் இடத்தில் இருப்பது போன்று பிரமிக்க வைத்தது. சுமார் 2 மணி நேரம் இந்த பயிற்சி நடந்தது. சிறப்பாக சாகசம் செய்த வீரர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஜோக் பரிசுகளை வழங்கினார். லெப்டினன்ட் ஜெனரல் ஜோக் கூறுகையில், ‘‘விமானம் மூலம் 12,000 அடி உயரத்தில் பாராசூட் டில் இருந்து குதித்து, எதிரி நாட்டுக்குள் நுழைந்து போர் நிகழ்த்த முடியும். நமது வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். சென்னை வாழ் மக்களுக்காகவும், ராணுவ அதிகாரிகள் பயிற்சியின் 50ம் ஆண்டு நிறைவையொட்டியும், இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது‘’’ என்றார். திருவண்ணாமலையை சேர்ந்த வீரர் குப்புசாமி கூறுகையில், ‘‘இளம் வீரர்கள் பாராசூட் பயிற்சியில் ஈடுபட வேண்டும். பாராசூட் பயிற்சி பெற்றால் ராணுவத்துக்கு நல்லது’’ என்றார். பயிற்சி மையத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment