மண்டபம்::ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காந்திநகர் கடல் பகுதியிலிருந்து, இலங்கைக்கு கடத்த முயன்ற, 35 செம்மரக் கட்டைகளுடன், மூன்று பேர் பிடிபட்டனர். சமீப காலமாக, தமிழக கடல் வழியாக, இலங்கைக்கு கடத்தல்கள் குறைந்திருந்தன. இந்திய கப்பற்படை, கடலோர காவல்படை, விமானப் படை, சுங்கத் துறையினர், மன்னார் கடல் பகுதியில், தற்போது தீவிர ரோந்து மேற்கொள்வதில்லை. இதனால் இலங்கைக்கு, மீண்டும் கடத்தல் துவங்கி உள்ளது.
மண்டபத்தில் கியூ பிரிவு போலீசார், சமீபத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர், மண்டபம் மீனவர் காலனியில் பதுங்கினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக, 35 செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மரக்கட்டைகளுடன் மூவரையும், கியூ பிரிவு போலீசார், சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களில், தங்கராஜ் என்பவர் கூறியதாவது: சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக, ஷேக் என்பவர், பஸ்சில், 35 கட்டைகளை அனுப்பினார். நேற்று முன் தினம் போன் செய்த அவர் கூறியபடி, மறைத்து வைத்திருந்தோம்.இவ்வாறு தங்கராஜ் கூறினார்.
மண்டபம் வனத் துறையினர் கூறியதாவது:செம்மரக் கட்டைகளின் எடை, 700 கிலோ; விலை, 1.05 கோடி ரூபாய். செம்மரத்தின் நடுப்பகுதியான இந்த மரக்கட்டைகள், வீடுகள்,கோவில்களில், மரச் சிற்பங்களுக்கு பயன்படுத்தப்படும். இலங்கைக்கு தமிழக கடல்வழியாக மரக்கட்டைகள் கடத்தப்படுவது இதுவே முதன்முறை.இவ்வாறு வனத் துறையினர் கூறினர்.
No comments:
Post a Comment