Pages

Wednesday, January 4, 2012

தூதரக அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம்: இவு நகரை விட்டு இந்திய வர்த்தகர்கள் வெளியேற அறிவுரை!

Wednesday,January,04,2012
பீஜிங்: சீனாவில், இந்தியத் தூதரக அதிகாரி தாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட இந்திய ஊழியர்கள் இருவரும், பாதுகாப்பாக ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொழில் நகரமான இவுவில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் தங்கும்படி அங்குள்ள இந்திய வர்த்தகர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பரபரப்பு: சீனாவின், ஷீஜியாங் மாகாணத்தின் தொழில் நகரமான இவுவில், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம்சுந்தர் அகர்வால் இருவரையும், சீன வர்த்தகர்கள் சிறை பிடித்ததும், தொடர்ந்து கோர்ட்டில், இந்தியத் தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் சரமாரியாகத் தாக்கியதும், பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

ஓட்டலுக்கு வெளியில் கூட்டம்: இந்நிலையில், சீன வர்த்தகர்களுக்கு அஞ்சி, போலீஸ் விசாரணைக் காவலில் இருந்து வெளியே வர மறுத்த இந்தியர்கள் இருவரையும், இவு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் போலீசார் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். இருப்பினும், ஓட்டலுக்கு வெளியே, சீன வர்த்தகர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டு நிற்பதாக ரஹேஜா, தொலைபேசி மூலம் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அவர்களை, ஷாங்காய் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.

கொடுமைப்படுத்திய சீனர்கள்: கடந்தாண்டு டிச., 15ம் தேதி, இருவரையும், சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று, பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தியுள்ளதாக, இருவரும் தெரிவித்துள்ளனர். அதன் பின் தான், இருவரையும், சீனர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஓடிப் போன நிறுவன உரிமையாளர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சீனர்களால் தாக்கப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி பாலச்சந்திரன், ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய தூதரகம் அறிவுரை: இதற்கிடையில், பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக இணையதளத்தில், இவுவில் உள்ள இந்திய வர்த்தகர்கள், அந்நகரை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்தியத் தூதரக இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஷீஜியாங் மாகாணத்தின் இவு நகரில் உள்ள இந்திய வர்த்தகர்கள், அந்நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர வேண்டாம். வர்த்தகர் அல்லாத இந்தியர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்திய வர்த்தகர்கள் அந்நகரை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கும்படி எச்சரிக்கப்படுகின்றனர். இந்திய வர்த்தகர்கள் இருவர், இவுவில் உள்ள சீன வர்த்தகர்களால், சிறை பிடிக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதை, இந்திய வர்த்தகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில் எதிர்காலத்தில், சட்டப்பூர்வ தீர்வுகள் கிடைக்கும் என்பதற்கு, உத்தரவாதம் அளிக்க முடியாது. பிரச்னைகளில் சிக்கும் நபர்களைக் காக்க, போதுமான நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன. இவ்வாறு அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்படி நடக்க வேண்டும்: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இது வர்த்தகம் தொடர்பான பிரச்னை. அதனால் இந்தியர்களுக்கு எவ்வித ஊறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் கவலை. இப்பிரச்னை சட்டப்படி தீர்க்கப்பட வேண்டும். சீன அதிகாரிகளிடம் இதுகுறித்து எடுத்துக் கூறும்படி, பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதகரத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். டில்லியில் உள்ள சீன தூதரக துணை தூதரை இதுகுறித்து அழைத்துப் பேசியுள்ளோம். இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்தார்.

No comments:

Post a Comment