Pages

Thursday, January 5, 2012

தி.மு.க. இளைஞர் அணியில் 40 வயதை கடந்தவர்களுக்கு இடம் இல்லை: கட்சியை வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு!

Thursday,January 05, 2012
சென்னை:கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. பெரும் சரிவை சந்தித்தது. இந்த தேர்தல்களில் இளைஞர்களின் வாக்கு பெருமளவில் தி.மு.க. பக்கம் விழவில்லை என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இளைஞர் அணியில் இருப்பவர்கள் வயதானவர்கள்.

மேலும் புதிதாக வருபவர்களுக்கு இளைஞர் அணியில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. தி.மு.க.வின் முக்கியமான அமைப்பாக விளங்குவது இளைஞர் அணிதான். இந்த இளைஞர் அணி 1980-ல் உருவாக்கப்பட்டது. 1981-ல் மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேர் இளைஞர் அணியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

தற்போது மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் செயலாளராக உள்ளார். பல பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் தோல்விக்கு பிறகு இளைஞர் அணியை பலப்படுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த தேர்தலில் நாங்கள் பின்னடவை சந்தித்தது உண்மை. மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பி வாக்களித்தார்கள். ஆனால் இப்போது மிகவும் அதிருப்தியில் உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் 26 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். தி.மு.க.வின் அடித்தளம் பலமானது. இளைஞர் அணியில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என் பதை உணர்ந்துள்ளோம்.

இப்போது அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அவர்களில் திறமையான 50 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்வார்கள். நான் நேரடியாக சென்று அவர்களிடம் விவாதம் நடத்தி திறமையானர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் நிர்வாகிகளின் அதிகபட்ச வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும். நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளில் நிர்வாகிகள் வயது அதிகபட்சமாக 30-க்குள் இருக்க வேண்டும். உறுப்பினராக சேரும் போதே வயது சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயதானவர்கள் கழகத்தில் பணியாற்றுவார்கள். தகுதியும், திறமையும் கொண்ட இளைஞர்களுக்கு இளைஞர் அணியில் பொறுப்புகள் கிடைக்கும். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு நடக்கிறது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து தேர்வு செய்யப்படுவார்கள். 3 மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு மாநில அளவில் இளைஞர் அணி மாநாடு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment