Wednesday ,January ,04, 2012மண்டபம்:கடந்த மாதம், கடலில் வீசிய காற்றின் வேகத்தால் திசைமாறி, இலங்கை கடற்படையிடம் சிக்கிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 35மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சர்வதேச எல்லையில், மண்டபம் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.கடந்த டிச.,19ல், 3 படகுகளில் ஜெகதாபட்டினத்திலிருந்து, 16 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கடலில் காற்றின் வேகத்தால், இவர்களது படகுகள் திசைமாறி, இலங்கை நெடுந்தீவு பகுதியில் ஒதுங்கினர். அதே போல், கோட்டைமேட்டிலிருந்து, 2 படகில் சென்ற, 7 பேர் நெடுந்தீவிலும், அனலித்தீவு பகுதியிலும் ஒதுங்கினர்.
கடந்த டிச., 26ல், நாகப்பட்டினம் பகுதியிலிருந்து சென்ற, 6 பேர், யாழ்ப்பாணம் வடமராத்தியில் கரை ஒதுங்கினர். டிச., 27ல், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினத்திலிருந்து, 2 படகுகளில் சென்ற 6 பேர், நெடுந்தீவு கடல் பகுதியில் கரை ஒதுங்கினர்.இவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கை கெய்ட்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவர்களை, கோர்ட் அன்றைய தினமே விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தனியாக வீடு பிடித்து தங்க வைத்தனர்.நேற்று காலை 12.30 மணிக்கு, சர்வதேச கடல் எல்லையில், இந்திய கடலோர காவல் படையினரிடம் தமிழக மீனவர்கள், 35 பேர் ஒப்படைக்கப்பட்டனர்.
மீனவர்கள், இரவில் மண்டபம் கடலோரக் காவல் படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்தபோது, எட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதில், நேற்று விடுவிக்கப்பட்ட மீனவர்களுடன், இரண்டு படகுகள் மட்டும் கொண்டு வரப்பட்டன. மீதமுள்ள ஆறு படகுகளை, இன்று, 14 விசைப் படகுகளில், 81 மீனவ மீட்பு குழுவினர், இலங்கைக்கு சென்று மீட்டு வர உள்ளனர்.
No comments:
Post a Comment