Pages

Saturday, September 10, 2011

2ம் இணைப்பு:- உறுதியான பெண்மணி என்ற மக்களின் நம்பிக்கையை முதல்வர் ஜெயலலிதா பொய்யாக்கி விட்டார் முன்னாள்-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

Saturday, September 10, 2011
சென்னை, செப். 9: உறுதியான பெண்மணி என்ற மக்களின் நம்பிக்கையை முதல்வர் ஜெயலலிதா பொய்யாக்கி விட்டதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி, ராஜீவ் காந்தியுடன் குண்டுவெடிப்பில் பலியான 15 பேரின் குடும்பத்தினர் சென்னையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

அதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

சமீப நாள்களாக தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது ராஜீவ் காந்தியும் அவரோடு பலியானவர்களும் அநாதைகளோ என்று எண்ணத் தோன்றுகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் பேசியது பத்திரிகைகளில் வெளிவந்தது.

அதன் பிறகு எனக்கு மிரட்டல் விடுத்து 300-க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜாவுக்கும், ராஜீவ் காந்தியோடு பலியான குடும்பத்தினர் சிலருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டியே சாதிக்க வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது.

ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் அந்த நம்பிக்கையை ஜெயலலிதா பொய்யாக்கி விட்டார்.

பேரவையில் அந்தத் தீர்மானம் வந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அதனை எதிர்ப்பதாக கையை உயர்த்தியபோதும், அதனை ஏற்காமல் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவிடம் மீண்டும் சர்வாதிகாரத்தனம் தலைதூக்கியுள்ளதையே இது காட்டுகிறது.

சீமான் போன்றவர்கள் பாராட்டி அடிக்கும் சுவரொட்டிகளைப் பார்த்து ஜெயலலிதா மயங்கி விடக்கூடாது. தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கினால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை. தேவைப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நடத்துவோம். தீவிரவாதத்தை யாருமே ஆதரிக்கக் கூடாது. அது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றார் இளங்கோவன்.

ராஜீவ் காந்தியுடன் பலியான ஐ.பி.எஸ். அதிகாரி முகமது இக்பால் மகன் ஜாவித் இக்பால், இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப் தம்பி ஜான் ஜோசப், மருமகள் சார்லட், இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பத்தைச் சேர்ந்த பாலசரஸ்வதி, பவித்ராதேவி, காவ்யா, காங்கிரஸ் நிர்வாகி லீக் முனுசாமியின் மகன் லீக் மோகன், மனைவி போத்தியம்மாள், காங்கிரஸ் நிர்வாகி சந்தானி பேகத்தின் மகள் அப்சரி பேகம், மகன் அப்பாஸ், மருமகள்கள் சுரையா பானு, ரூபினா பேகம், பேரன் முகமது அஜீஸ் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் எம்.பி.க்கள் இரா.அன்பரசு, வள்ளல்பெருமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், எஸ்.வி.சேகர், எச். வசந்தகுமார், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.சிரஞ்சீவி, நாசே ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment