Pages

Saturday, August 20, 2011

அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்ட துணுக்குகள்!

Saturday, August 20, 2011
ராம்லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னாஹசாரே இன்று காலை 10 மணிக்கு மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் சிறிது நேரம் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:- என் உடல் எடையில் 3 1/2 கிலோ எடை குறைந்துவிட்டது. கொஞ்சம் பலவீனமாக உணர்கிறேன். ஆனால் உங்களது உற்சாகம் எனக்கு சக்தியைத் தருகிறது. என் உடல் நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். வலுவான லோக்பால் சட்டம் கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும். நாம் ஏன் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் தெரியுமா? அரசு கஜானாவில் உள்ள சொத்துக்கள் நமக்கு உரியவை. இந்த சொத்துக்களுக்கு ஆபத்து வந்துள்ளது. ஆனால் திருடர்களால் அந்த ஆபத்து வரவில்லை. அந்த சொத்தை பாதுகாப்பவர்களால்தான் அதற்கு ஆபத்து உள்ளது. நமது நாட்டுக்கு எதிரிகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் ஆள்பவர்களால்தான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே லோக்பால் சட்டம் அவசியமானது. அந்த லோக்பால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்.

இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

அன்னா ஹசாரேயுடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் ராம்லீலா மைதானத்திலேயே படுத்து தூங்கினார்கள். பலத்த மழை பெய்யும் அறிகுறி இருந்தபோதும், மக்கள் கலைந்து செல்லவில்லை.

ஹசாரேயை கைது செய்தது தவறு; தேசியவாத காங்கிரஸ் தாக்கு

அன்னா ஹசாரே போராட்ட விவகாரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திரிபாதி கூறி இருப்பதாவது:-

காந்தியவாதியான அன்னா ஹசாரேயை கைது செய்தது தவறு. இந்த நடவடிக்கை மூலம், காங்கிரஸ் கட்சி, சூழ்நிலையை தவறாக கையாண்டுள்ளது. அரசு சரியான தந்திர நடவடிக்கையை கையாளவில்லை. ஏதாவது நடவடிக்கை எடுக்கும் முன்பு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்களிடம் கலந்து பேசி இருக்க வேண்டும். கலந்து பேசி இருந்தால் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். இவ்வாறு திரிபாதி கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு தயார் -அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பேச்சு வார்த்தை எப்போது நடைபெறும், அதில் யார்- யார்? பங்கேற்பார்கள் என்று உறுதியாக எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக அன்னா குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எங்கே வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் சரி, பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

லோக்பாலை நிறைவேற்ற பா.ஜ.க. தலைவர் கடிதம்

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மேல்- சபை எம்.பி.யுமான முக்தார் அப்பாஸ் நக்வி, இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஊழலுக்கு எதிராக மக்களிடம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சாதாரண குடிமகன் என்ற வகையில் ஊழல் பிரச்சினை பாதித்துள்ளது. எம்.பி. என்ற முறையில் இதை கண்டு வெட்கப்படுகிறேன். எனவேதான் இந்த கடிதத்தை மிகுந்த வேதனையுடன் எழுதியுள்ளேன். இன்று ஊழலுக்கு எதிராக மக்கள் கோபத்துடன் திரண்டெழுந்துள்ள ஒரு புதுமையான சூழ்நிலை காணப்படுகிறது. பாராளுமன்றம், மற்றும் சட்டத்தின் நம்பகத்தன்மையை சோதித்து பார்க்கும் நேரம் வந்துள்ளது. எனவே அன்னா ஹசாரே குழுவினரின் குரலை நிராகரிப்பது என்பது முட்டாள் தனத்தையே காட்டும். ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை மத்திய அரசு ஒத்துக் கொள்ள வேண்டும், இனியும் தாமதித்தால் இது பெரும் தீயாக மாறும். ஆகையால் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு, லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் இதற்காக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டலாம். மத்திய அரசு உடனடியாக இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அப்பாஸ் நக்வி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

லோக்பால் சட்டம் குறித்து மக்கள் கருத்து சொல்லலாம்

லோக்பால் சட்டமுன் வடிவு குறித்து தற்போது பாராளுமன்ற சட்டம், நீதிக்கான நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு எதிர்நோக்கி உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதிக்குள் அதாவது பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவதற்குள், இந்த நிலைக்குழு தனது பரிந்துரைகளை வழங்க இயலாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிலைக்குழு சார்பில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் லோக்பால் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கு ஏற்ப பரிந்துரைகளில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் இதை அன்னா ஹசாரே, குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்கள் நேரத்தையும், பாராளுமன்றத்தின் நோக்கத்தையும் வீணாக்கவே இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே நாங்கள் இந்த நிலைக்குழு முன்பு ஆஜராகி எங்களது கருத்துக்களை கூறிவிட்டோம். தற்போதைய லோக்பால் சட்டம் ஊழலை மேலும் ஊக்குவிக்கும். அதோடு ஊழல் செய்பவர்களை பாதுகாக்கும் வகையில்தான் உள்ளது என்று நாங்கள் தெளிவாக கூறி இருக்கிறோம். மீண்டும் கருத்து சொல்ல தேவையில்லை என்றார்.

லோக்பால் சட்டம் கடந்த 4-ந்தேதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நிலைக்குழு ஆய்வில் உள்ளது. இந்த நிலைக்குழு அறிக்கை கொடுக்க 3 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஷன் ஷோவில் "அன்னா குல்லா"

அன்னா ஹசாரேக்கு பேஷன் ஷோவிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மும்பையில் நடைபெறும் லக்மே பேஷன் ஷோவில் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு காந்தி குல்லா வழங்கப்பட்டது. அதில் நான் அன்னா ஹசாரே என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. பேஷன் டிசைனர் பர்வேஸ் ஜாய் இடுப்பில் கறுப்பு ரிப்பன் கட்டி இருந்தார். அதில் நான் அன்னா ஹசாரே என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

அன்னாஹசாரேக்கு ஆதரவாக ரெயிலில் ஊழல் எதிர்ப்பு பிரசாரம்

அன்னாஹசாரேக்கு ஆதரவாக மும்பை புறநகர் ரெயிலில் ஊழல் எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. இந்த ரெயில் நேற்று காலை 10.57 மணிக்கு சர்ச் கேட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு போரிலிவி ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. அப்போது ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மாயங்க் காந்தி ரெயில் பயணிகள் மத்தியில் 20 நிமிடம் ஊழல் ஒழிப்பு பற்றி பிரசங்கம் செய்தார்.

இதற்கு ரெயில் என்ஜின் டிரைவரும் ஆதரவு தெரிவித்து ரெயிலை ஓட்டாமல் அங்கேயே நிறுத்தி வைத்து இருந்தார். அதன் பிறகு ரெயில் புறப்பட்டுச் சென்றது.

எகிப்தில் 1 லட்சம் பேர் ஊழல் எதிர்ப்பு பேரணி

அன்னா ஹசாரே ஊழலை எதிர்த்து டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதே போல் எகிப்தில் ஊழல் எதிர்ப்பு ஆதரவாளர்கள் நாளை 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் தலைநகர் கெய்ரோவில் பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஊனமுற்றோர் களத்தில் குதித்தனர்

அன்னாஹசாரேக்கு பல்வேறு வகையிலும் ஆதரவு குவிகிறது. மும்பையில் ஊனமுற்றோர் விளையாட்டு அமைப்பைச் சேர்ந்த ஊனமுற்றோர் நாளை ஆசாத் மைதானத்தில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஊனமுற்றோருக்கு உதவ அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அது எங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை. ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலை ஒழிக்க அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் நாடார் தெரிவித்தார்.

ஒருமுறை அன்னா ஹசாரேயை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் என்னைப் பார்த்து நீங்கள் ஊனமுற்றவர் அல்ல, உங்களுக்கு தீமை இழைப்பவர்கள்தான் ஊனமுற்றோர் என்று தெரிவித்ததாகவும் பிரகாஷ் கூறினார்.    

எம்.பி.க்கள் வீடுமுன்பு தர்ணா- அன்னா குழு கோரிக்கை

ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மதியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், உங்கள் எம்.பி. வீடு முன்பு தர்ணா செய்யுங்கள். தற்போதைய அரசின் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று எம்.பி.யிடம் வலியுறுத்துங்கள். எம்.பி. மறுப்பு தெரிவித்தால் அடுத்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு போடமாட்டோம் என சொல்லுங்கள் என்றார்.

No comments:

Post a Comment