Pages

Wednesday, August 5, 2015

பொதுப் பணத்தை களவாடிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ளுமாறு டிலான் கோரிக்கை!

Wednesday, August 05, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் கொழும்பில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா 5 நஞ்சுப் போத்தல்கள் சகிதம் வருகை தந்ததால் அங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட போத்தல்களிலுள்ள நஞ்சை ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் அருந்தவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான பெயர் விவரங்களையும் வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
இதில் பங்கேற்க வந்திருந்த ஐ.ம.சு.முவின் தேசியப் பட்டியல் வேட்பாளரான டிலான் பெரோ, தான் உரையாற்றுகையிலேயே நஞ்சுபோத்தல்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி அதை அருந்தவேண்டியவர்களின் பெயரையும் வெளியிட்டார். தான் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதற்கான விளக்கத்தையும் டிலான் வழங்கினார். மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பிணைமுறி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள மோசடி, நெடுஞ்சாலைகள் மோசடி என்பற்றுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், புளுமெண்டல் துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலக சண்டியர்களை தன்னுடன் வைத்திருந்த ரவி கருணாநாயக்க, தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வாக்குகளைப் பெற முயலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பதுளையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகிய ஐவருமே நஞ்சருந்த வேண்டியவர்கள்.
 
அண்மையில் ரணில் - சோபித்த தேரர்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் நஞ்சு அருந்தவேண்டியவர்கள் என தேரர் ரணிலை சாடி பொதுவான கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இவர்களது மோசடிகள் தொடர்பில் பல உண்மைகளை நாங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளோம். இந்த ஆதரங்களுடன் சோபித்த தேரை சந்தித்து நஞ்சு போத்தல்களை அவர் வாயிலாகவே மேற்குறிப்பிட்டவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். நாங்கள் குறிப்பிட்டுள்ளவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு இதனை அனுப்புவதனால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே, இந்தக் கருத்தை வைத்திருந்த தேரரே இதனை வழங்குவதற்குச் சரியானவர் என்று நாங்கள் எண்ணுகின்றோம். மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மீது சேறு பூச பல திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்தபோதிலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றுள்ளது.
 
ஆரம்பத்தில் மஹிந்தவை மோசடிக்காரர் என்று குறிப்பிட்டனர். ஆனால், அவர்களால் அவற்றை நிரூபிக்கமுடியாது போனது. தற்போது அவர் குடும்பத்தைக் கொலைசெய்தவர்களாக சித்திரிக்க ஐ.தே.க. முயற்சி செய்துவருகின்றது - என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் உதய கம்மன்பில மற்றும் ஐ.ம.சு.மு. தேசியப் பட்டியல் உறுப்பினர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment