Pages

Tuesday, December 16, 2014

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் நூறு வீதம் திருந்திவிட்டார்கள் என கருதப்பட முடியாது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ!

Tuesday, December 16, 2014
இலங்கை::
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட  புலி உறுப்பினர்கள் நூறு வீதம் திருந்திவிட்டார்கள் என கருதப்பட முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் நூறு வீதம் பயங்கரவாத எண்ணங்களிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என உறுதிப்படக் கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு வலுவாக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறான நிலைமைகளை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், சர்வதேச சக்திகள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஸ சக்திகளை இல்லாதொழிப்பதன் மூலமே இந்த அழுத்தங்களை வலுப்படுத்த முடியும் என்பது சர்வதேச சக்திகளுக்கு தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களின் போது படைவீரர்களை பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்தாலும் அந்த வாக்குறுதிகள் போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும் சர்வதேச அழுத்தங்கள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள், ஜெனீவா மனித உரிமைப் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தை சர்வதேச யுத்த நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதாள உலகக் கோஸ்டிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2005ம்ஆண்டுக்கு முன்னதாகவும் போதைப் பொருட்கள் காணப்பட்டதாகவும், போதைப் பொருட்களை பிடிக்கும்போதே போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காரணமாகவே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் தாம் அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸக்கள் அரசியலில் அதிகம் ஈடுபடுவதாக கூறுபவர்கள் தாம் அரசியலில் ஈடுபடக் கூடும் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஓர் அரசாங்க அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment