Pages

Wednesday, December 3, 2014

எதிரணியில் வாக்குப் பலமற்ற அமைப்புகள் தான் உள்ளதது: சுசில் பிரேம ஜயந்த!

Wednesday, December 03, 2014
இலங்கை::எதிர்க்கட்சி பொதுவேட்பாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த ஒப்பந்தத்தில் 45 கட்சிகள் மற்றும் அமைப்புகள் கைச்சாத்திட்டுள்ளதாக கூறினாலும், இரண்டு அரசியல் கட்சிகளே அதில் உள்ளன. ஏனையவை வாக்குப் பலம் இல்லாத சிறு அமைப்புகளே என ஆளும்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
 
நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, திலங்க சுமதிபால எம்.பி. ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
45 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி சேர்வதாக எதிர்தரப்பு அறிவித்தாலும், அதில் 2 கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. ஏனையவை அரச சார்பற்ற நிறு வனங்களும் சிறு சிறு அமைப்புகளுமாகும். இவற்றுக்கு மாகாண, உள்ளூராட்சி சபை மட்டத்தில் கூட உறுப்பினர்கள் கிடையாது. வாக்குப் பலம் இல்லாத தரப்புகளே மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளன. ஆனால், ஐ.ம.சு.மு.வுடன் 17 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இது தவிர தேர்தல் காலத்தில் ஐ.ம.சு.மு.வுடன் கைகோர்க்கும் சுமார் 30 கட்சிகள் இருக்கின்றன. ஆனால் மைத்திரிபால சிறிசேனவுடன் ஐ.தே.க.வும் ஜனநாயகக் கட்சியும் மட்டுமே இணைந்துள்ளன.
 
ராஜித சேனாரத்னவிற்கோ குணவர்தனவுக்கோ கட்சி இருக்கிறதா? அல்லது மைத்திரிபால சிறிசேனவிற்காவது கட்சியொன்று உள்ளதா? இவர்களின் கூட்டணிக்கு யாப்புக்கூட கிடையாது. இந்த கூட்டணியின் நிலைமை நன்கு தெளிவாகிறது. எதிர்தரப்பு கூட்டணியின் புரிந்துணர்வு உடன்பாட்டினால் எமக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது. மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏனைய கட்சி செயலாளர்கள் போன்று திரும்பி வர நேரிடும்.
 
எதிர்தரப்பு கூட்டணியில் இருப்போர் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடியவர் களல்லர். தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது என்று கூறிய ஜே.வி.பி. தற்பொழுது மஹிந்தவை தோற்கடிப்பதாக கூறுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூறியிருக்கிறார்.
 
இதற்கு முன் சந்திரிகா அரசாங்கத்துடன் இணைந்த ஜே.வி.பி. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு கோரவில்லை. அன்று 38 ஆக இருந்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் தொகை 3 ஆக குறைந்திருக்கிறது. அதனை பாதுகாக்கவே ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. நலுவல்போக்கை கடைப்பிடிக்கிறது. எதிர்தரப்பு உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் நடைமுறைச்சாத்தியமற்றவை. அதிலுள்ளவாறு ஜனாதிபதி முறையை மாற்றுவது இலகுவானதல்ல. தேர்தல் முறையை மாற்றுவதற்கு 2/3 பெருபான்மை மட்டுமன்றி சர்வஜன வாக்கெடுப்பும் தேவை. இவர்களின் உடன்படிக்கையிலுள்ள விடயங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment