Pages

Saturday, December 20, 2014

3 ஆசிரம பெண்கள் தற்கொலை விவகாரம் : புதுவையில் முழு அடைப்பு பஸ்கள் மீது கல்வீச்சு; பதற்றம்!

Saturday, December 20, 2014
புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரம பெண்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து புதுவையில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு விடுத்த பந்த் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனியார் பஸ்கள் ஓடவில்லை. கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. ஆங்காங்கே பஸ்கள் மீது மர்மகும்பல் சரமாரி கல்வீச்சு நடத்தியதால் பதற்றம் நிலவியது.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத் (85). ஆசிரம ஊழியரான இவர் தனது மனைவி சாந்திதேவி (74), மகள்கள் ஜெயஸ்ரீ (54), நிவேதிதா (46), ராஜஸ்ரீ (42), அருணாஸ்ரீ (40), ஹேமலதா (39) அரவிந்தர் ஆசிரம அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.இவர்களுக்கு ஆசிரமத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நிர்வாகம், உச்சநீதிமன்றத்தை நாடி அவர்களை வெளியேற்ற முயன்றது. இதை கண்டித்து ஹேமலதா உள்ளிட்ட 5 பேரும் 17ம்தேதி குடியிருப்பின் 4வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

அவர்களை மீட்ட போலீசார் கேன்டீன் வீதியில் தங்கியிருந்த பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மறுநாள் அதிகாலை காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று கடலில் குதித்தனர். இதில் தாய் சாந்திதேவி, அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது. பிரசாத், ஹேமலதா, ஜெயஸ்ரீ, நிவேதிதா உள்ளிட்ட 4 பேரும் மீட்கப்பட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து புதுவையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதற்கு காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் இடதுசாரி அமைப்புகள் தனியாக கடையடைப்பு அறிவித்தன. அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தது.

அதன்படி புதுவையில் இன்று பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. தமிழக, புதுச்சேரி அரசு பஸ்கள் குறைந்த அளவிலே இயங்கின. தமிழக பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கிவிட்டன. கடலூர் செல்லும் ஒருசில பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் புதுவைக்குள் வந்து சென்றன. வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மருந்து நிறுவனங்கள் மட்டும் திறந்திருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் அரசு பள்ளிகள் திட்டமிட்டபடி இயங்கின.

ஆனால் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் மட்டும் ஜன.2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பந்த் போராட்டத்தால் பஸ்கள் இயங்காததால் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர்.பெரிய மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மார்க்கெட்கள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே போராட்டக்குழுவினர் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர். 100 அடிரோட்டில் பிஆர்டிசி பஸ் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்கியது. இதுதவிர உப்பளம் அம்பேத்கர் சிலை மற்றும் உழந்தை கீரப்பாளையத்தில் தனியார் கல்வி நிறுவன பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியதில் சேதமடைந்தன. இதுதவிர திருவள்ளுவர் பஸ் டெப்போ அருகிலும் தமிழக அரசு  பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் புதுவை முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

No comments:

Post a Comment