Tuesday, December 16, 2014

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 16 மணி நேர பதற்றம்: ஓட்டலுக்குள் ஊடுருவிய தீவிரவாதி பலி!

Tuesday, December 16, 2014
சிட்னி::அந்த பகுதியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் பாராளுமன்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, அமெரிக்க, இந்திய தூதரகங்கள், இந்திய சுற்றுலா கழக அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்து உள்ளன.

லிண்ட் கபே ஓட்டலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என வாடிக்கையாளர்கள் பலர் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியுடன் அந்த ஓட்டலுக்குள் புகுந்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறை பிடித்தான்.

ஓட்டலுக்குள் 2 இடங்களில் குண்டு வைத்து இருப்பதாகவும், மேலும் நகரில் 2 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பிணைக்கைதிகளிடம் அவன் கூறினான்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசாரும் துணை ராணுவ படையினரும் அங்கு விரைந்து சென்று, அந்த பகுதி முழுவதையும் ‘சீல்’ வைத்தனர். அந்த கட்டிடத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணிக்கு ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. அந்த கட்டிடத்தில் ஓட்டலுக்கு மேலே உள்ள தளங்களில் இருந்தவர்களை போலீசார் ஏணிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

அந்த ஓட்டலின் எதிரே டெலிவிஷன் நிலைய அலுவலகம் உள்ளது. ஓட்டலின் கண்ணாடி ஜன்னல் ஓரம் பிணைக்கைதிகள் நிற்பது போன்ற காட்சியை அந்த டெலிவிஷன் ஒளிபரப்பியது.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டிடம் தான் நேரடியாக பேச விரும்புவதாக அந்த தீவிரவாதி தெரிவித்தான்.

அவன் எதற்காக அங்கிருந்தவர்களை சிறை பிடித்தான்? அவனுடைய கோரிக்கை என்ன என்பது பற்றி அவன் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீவிரவாதிக்கு 50 வயது இருக்கும் என்றும், அவன் கருப்புநிற மேல் சட்டை அணிந்துள்ளதாக தெரியவந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தீவிரவாதியின் பிடியில் இருந்து 5 பேர் நைசாக தப்பி வெளியே ஓடிவந்து விட்டனர். அவர்களிடம் ஓட்டலுக்குள் நிலவும் சூழ்நிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதி யார் என்பது பற்றி போலீசாருக்கு அடையாளம் தெரிந்தது.

ஓட்டலுக்குள் தீவிரவாதியிடம் பிணைக்கைதியாக சிக்கி இருப்பவர்களில் 2 பேர் இந்தியர் என்பது தெரியவந்தது.

அப்பாவி மக்களை தீவிரவாதி பிணைக்கைதிகளாக சிறைபிடித்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அரசியல் நோக்கம் கொண்ட இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாக கூறிய அவர், பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மக்களின் கவலையை புரிந்துகொள்வதாக கூறிய அவர், ஆஸ்திரேலியா அமைதியான நாடு என்றும், அந்த நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

லிண்ட் கபே ஓட்டலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில்தான் இந்திய தூதரகம் அமைந்து உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தூதரக அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி 12 மணி அளவில் அலுவலகத்தை மூடிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாக அங்குள்ள இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்தார்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய மத்திய வங்கி, அமெரிக்க தூதரகம் மற்றும் சிட்னி ஒபேரா ஹவுஸ், அரசு நூலகம், கோர்ட்டுகள் உள்ளிட்ட பிற அலுவலகங்களும் மூடப்பட்டன. சில கட்டிடங்களில் இருந்தவர்களை போலீசார் வெளியேற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கருதி நகரில் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், தூதரக அதிகாரிகள் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், டெல்லியில் வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறினார்.

ஓட்டலில் இருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில், பிணைக்கைதிகளை மீட்கும் அதிரடி நடவடிக்கையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். நேற்று இரவு ஓட்டலுக்கு மின்சார சப்ளையை துண்டித்தனர். இதனால் ஓட்டல் இருளில் மூழ்கியது. பின்னர் ஓட்டலுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினார்கள். அப்போது பிணைக்கைதிகளில் சிலர் தப்பி வெளியே ஓடி வந்தனர். தீவிரவாதியும் பதில் தாக்குதல் நடத்தினான்.

இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

தாக்குதலின் போது, வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஒரு ‘ரோபோ’வையும் ஓட்டலுக்குள் போலீசார் அனுப்பினார்கள்.

போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அந்த தீவிரவாதி குண்டு பாய்ந்து பலியானான். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் உயிர் இழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீவிரவாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஓட்டலுக்குள் இருந்த மற்ற பிணைக்கைதிகளும் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தில் 2 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களை போலீசார் உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

16 மணி நேரம் நீடித்த இந்த பிரச்சினை, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 2 மணிக்கு முடிவுக்கு வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் ஹரோன் மோனிஸ் என்றும், 50 வயதான அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும், 1996-ம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு வந்து அரசியல் தஞ்சம் அடைந்ததாகவும் தெரியவந்தது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப்பகுதி மார்ட்டின் பிளேஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் கபே எனப்படும் ஓட்டல் உள்ளது.

No comments:

Post a Comment