Thursday, October 16, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு: சரத் பொன்சேகா சவால் - முடிந்தால் ஆவணத்தை வெளியிடுமாறு கோரிக்கை!

Thursday, October 16, 2014
இலங்கை::கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அப்பிரதேச மக்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்குறுதியளித்து தாம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாகவும், அந்த ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டு உள்ளதாகவும் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ என்ற நபர் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் அரியநேத்திரன் அண்மையில் குறிப்பிட்டார் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வெளியிட்ட இந்தக் கருத்து அப்பட்டமான ஓர் பொய் எனவும், மக்களை இவ்வாறு ஏமாற்றக் கூடாது என பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக் கொள்வதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
 

மக்களை ஏமாற்றாது அந்த ஆவணத்தை முடிந்தால் அம்பலப்படுத்துமாறு சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் இந்த சாவல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment