Monday, October 13, 2014

ஜெயலலிதா ஜாமின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை; அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

 Monday,October, 13, 2014
டெல்லி::சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இம்மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரையும் குற்றவாளி என்று அறிவித்தது.
 
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் கோரி 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவரை ஜாமீனில் விட முகாந்திரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி சந்திரசேகரா தள்ளுபடி செய்தார்.
 
ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகியும் ஜாமீன் கிடைக்கவில்லை. அதே போல மற்ற 3 பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வார இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரணைக்கு இன்று ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இதை அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டது.
 
விசாரணையை இவ்வார கடைசியில் அதாவது, வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துவிட்டது. ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகியும், ஜாமீன் கிடைக்காததால் வெறுப்பிலுள்ள ஜெயலலிதா தரப்பு, தற்போது மற்றொரு மூத்த வக்கீலும் மத்திய அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பாலி நாரிமனை ஜெயலலிதாவுக்காக வாதாட ஏற்பாடு செய்துள்ளது.
காவிரி பிரச்சனையில் இவர் தமிழகத்துக்கு எதிராக கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தான் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளது.

No comments:

Post a Comment