Pages

Tuesday, September 30, 2014

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமாத் துறை உண்ணாவிரதம்!

Tuesday, September 30, 2014
சென்னை::சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு சினிமா துறையினரும் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரையுலகினர் வரத் தொடங்கினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெயலலிதா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார்.

பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ஆதிராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

No comments:

Post a Comment