Tuesday, June 10, 2014

பாகிஸ்தான் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் ஊடுருவி தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - இலங்கை கடும் கண்டனம்!

இலங்கை::பாகிஸ்தான்படையினரால் முறியடிப்பு  இருதரப்பிலும் 28 பேர் பலி ; விமானங்களுக்கும் சேதம்

பாகிஸ்தான் கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் தலிபான் ஆயுததாரிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் நடந்த மோதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 தலிபான் ஆயுததாரிகளும் 14 பாதுகாப்புப் படையினரும் 4 விமானநிலைய அதிகாரிகளும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரிகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் சுமார் ஐந்து மணிநேரத்துக்கும் மேல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துக்கான உட்கட்டுமான வசதிகளை சீர்குலைத்து அவற்றை முடமாக்குவதை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயுததாரிகளின் இந்தத் தாக்குதலை முறியடித்திருப்பதானது பாகிஸ்தானிய பாதுகாப்புத் தரப்பினரின் நிபுணத்துவத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒத்துழைப்புக்களை அதிகரிக்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் வலியுறுத்தியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் விமானநிலையத் தாக்குதலுக்கு தலிபான் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடையில் இரண்டு மினி வான்களில் வந்த அவர்கள் விமான நிலையத்தின் சரக்கு ஏற்றியிறக்கப்படும் பகுதியிலுள்ள நுழைவாயிலால் உள்நுழைந்துள்ளனர்.

தன்னியக்கத் துப்பாக்கிகள் மற்றும் ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் நுழைந்த ஆயுதக் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு இரண்டு பகுதியாகப் பிரிந்து சென்றுள்ளனர். ஒரு குழு போக்கர் என்ற நுழைவாயிலை நோக்கியும் மற்றைய குழு சரக்கு ஏற்றியிறக்கப்படும் பகுதிக்கும் நுழைந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற ஆயுத தாரிகள் பயணிகள் அரங்குக்குள் நுழைவதே அவர்களின் நோக்கமாக இருந்தபோதும் பாகிஸ்தான் பாதுகாப்புத் தரப்பினரின் கடுமையான தாக்குதல் காரணமாக அவர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், சரக்கு ஏற்றியிறக்கப்படும் பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் ஆயுததாரிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இரு தரப்பிலும் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

விமானங்களைத் தாக்கும் ஆயுததாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நன்கு பயிற்சி பெற்ற ஆயுத தாரிகளே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இவர்கள் எடுத்துவந்திருந்த பைகளில் காய்ந்த பழங்கள், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் காணப்பட்டன. நீண்ட நேரம் தங்கியிருந்து தாக்குதல் நடத்துவது அவர்களின் திட்டமாக இருந்திருக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் 10 ஆயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7 ஆயுததாரிகள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூவர் தாம் அணிந்திருந்த தற்கொலை அங்கிகளை வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்களும் 4 விமானநிலைய அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
உரிமை கோரிய தலிபான்

கராச்சி விமான நிலையத் தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், விமானங்களைக் கடத்துவது, அரச மையங்களைத் தாக்குவது போன்றனவே இலக்காக இருந்தது என தலிபான் ஆயுதக் குழுவின் பேச்சாளர் சகிதுல்லா ஷாகித் தெரிவித்திருப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதலானது தமது ஆயுதக்குழு எந்தளவு பலம் வாய்ந்தது என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு உதாரணம் என்றும், இதனைவிட மோசமான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் தயாராக இருக்கவேண்டுமென எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை பயணிகள் அரங்கிற்கு ஆயுததாரிகள் நுழைந்திருந்தால் நிலைமை மோசமடைந்திருக்கும் என்றும், தாக்குதல் நடைபெற்ற சமயம் இரண்டு சர்வதேச விமானங்களிலிருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் பின்னர் பாரிய தீ விமான நிலையத்திற்குள் ஏற்பட்டிருந்தபோதும் எந்தவொரு விமானத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், விமானமொன்று எரிந்திருப்பதை கூகிள் செய்மதிமூலம் எடுத்தபடமொன்று காண்பிக்கிறது.

திங்கட்கிழமை நண்பகலுக்கு முன்னர் விமான நிலையம் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment