Pages

Monday, June 16, 2014

இனியும் அரசில் அமைச்சராக நீடிக்க முடியாது: தொலைபேசியில் ஜனாதிபதியிடம் தெரிவித்தார் ஹக்கீம்!

Monday, June 16, 2014
இலங்கை::ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர் தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தரொவருவர் தெரிவித்தார்.
தர்கா நகர் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளமையினாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது பொலிவியாவில் நடைபெறும் ஜி-77 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று இரவு இந்த பிரச்சினை குறித்து தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதன்போது தமது கடும் விசனத்தை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இன்று மாலை கூடி அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment