Monday, June 16, 2014

எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடர முடியாது: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

 Monday, June 16, 2014
ஜம்மு::எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் செயல்பட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை அவ்வப்போது இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

அதே போல் பாகிஸ்தான் ராணுவத்தினரின் குள்ளநரி வேலைகளுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக கூறுகிறார். ஆனால் அந்நாட்டு ராணுவமோ அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அப்படித்தான்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜெட்லி காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக சென்றார். அங்கு எல்லைப்புற சூழ்நிலை குறித்து அவர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காஷ்மீரின் பல்வேறு இடங்களையும் அருண்ஜெட்லி பார்வையிட்டார். முன்னதாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு  பிறகு ஸ்ரீநகரில் அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் ஊடுருவல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக் கூடாது. அப்படி மீறி செயல்பட்டால் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடரவே முடியாது. எனவே ஊடுருவல் முயற்சிகளை அந்நாடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அதற்கான வலிமை நமது ராணுவத்தினரிடம் உள்ளது. இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.

No comments:

Post a Comment