Wednesday, June 18, 2014
இலங்கை::எமது நாட்டை சதிவலையில் சிக்கவைக்கும் தந்திரமாகவே சர்வதேச சமூகம் எமக்கெதிராக விசாரணை நடத்த முயல்கிறது. இது நாட்டின் கெளரவம் மற்றும் இறைமையைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சினையாகும். இதற்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது. சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; எமது பிரேரணை தொடர்பில் ஐ. தே. கவும் ஜே.வி.பியும் திருத்தங்களை முன்வைத்துள்ளனர். அது எமது பிரேரணையை ஒத்ததாகும். இதன்மூலம் எமது பிரேரணைக்கு ஐ.தே.கவினதும் ஜே.வி.பி யினதும் பூரண ஒத்துழைப்பு காணப்படுகிறது. ஆனால், இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேசம் தலையிடுவது தவறல்ல என ஐ.தே.க எம். பி மங்கள சமரவீர மறைமுகமாகத் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த இடமளிக்க முடியாது என்று கூற ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது. இது தேசிய பிரச்சினையாகும். யுத்தத்திற்கு முடிவுகாணப்பட்டதை நாட்டைத் துண்டாட முயலும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் சமூகம் விரும்பவில்லை. நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ள இவர்கள் முயன்று வருகின்றனர். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் நாட்டின் மீது வெளிநாடுகளின் தலையீட்டை ஏற்படுத்தவும் இவர்கள் முயல்கின்றனர். சர்வதேச சமூகம் இவ்வாறு எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கையில் அதிலுள்ள பாதகமான நிலைமை குறித்து பாராளுமன்றத்தையும் பொதுமக்களையும் அறிவூட்ட வேண்டும்.
இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் சில வேளை ஐ.நா அதனைப் பொருட்படுத்தாது இருக்கலாம். இது நாட்டின் கெளரவம் இறைமை தொடர்பான பிரச்சினையாகும்.
ஐ.தே.க புலிகளுடன் உடன்படிக்கை செய்து நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக்கொடுத்து சர்வதேச சமூகம் கூறுவது போல நாட்டை காட்டிக்கொடுத்திருந்தால் எமக்கெதிராக இவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருக்காது. புலிகளை ஒழித்து பிரபாகரனை அழித்து பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டியதால் சர்வதேச சமூகம் எமக்கெதிராக விசாரணை நடத்த தயாராகிறது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா நிராயுதபாணியான பின்லாடனை கொலை செய்தது. இவர்கள்தான் எமது நாட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகின்றனர். இதன்மூலம் அமெரிக்காவின் இரட்டைவேடம் தெளிவாகிறது. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஆயுதமிருப்பதாகக் கூறி அந்நாடுகளில் அழிவை ஏற்படுத்திய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் செய்த யுத்தக் குற்றங்கள் குறித்து எதுவித விசாரணையும் இடம்பெறவில்லை.
எமது நாட்டை அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக தயாரித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பதாலேயே நாம் அதனை எதிர்க்கி றோம். நாட்டை மீட்டுதந்த படைவீரர் களை காட்டிக்கொடுக்க முடியாது. எம்மை சதிவலையில் சிக்கவைக்கும் தந்திரோபாயமாகவே ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
எமக்கெதிராக விசாரணை நடத்தக்கூடாது என்பது தொடர்பில் பல நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. ஜெனீவா விசாரணை என்பது முழு உலக நாடுகளும் இணைந்து நடத்தும் விசாரணை அல்ல. சில நாடுகளில் யுத்தத்திற்கு முடிவுகட்டி நல்லிணக்கம் ஏற்படுத்த 15 முதல் 20 வருடங்கள் பிடித்தன.
வெளிநாட்டவர்கள் கூறுவது போல் எமக்கு ஆட முடியாது. இவ்வாறு அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டுமென்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியில் எமக்கிடையே வேறுபாடு காணப்பட்டாலும் சர்வதேச சமூகம் எமது உள்ளக விடயங்களில் தலையிடுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது என்றார்.

No comments:
Post a Comment