Pages

Wednesday, June 11, 2014

ராமேஸ்வரத்தில் 3வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Wednesday, June, 11, 2014
ராமேஸ்வரம்::இலங்கை யாழ்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்கள் இன்று மாலை மண்டபம் வந்து சேர்கின்றனர். இதற்கிடையே, இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தில் இன்று 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் புதுக்கோட்டை கடலோர பகுதியில் இருந்து கடந்த 7ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 82 மீனவர்கள் யாழ்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே உத்தரவிட்டார். இதையடுத்து, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 36 மீனவர்களை ஊர்காவல்துறை கோர்ட் நேற்று மாலை விடுதலை செய்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 36 மீனவர்களும் இன்று மாலை மண்டபம் வந்து சேருகின்றனர். இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க உள்ளதால் இவர்களை அழைத்துவர இன்று காலை 6 மணியளவில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘ராஜ்கமல்‘ எனற ரோந்து கப்பல் இந்திய கடல் எல்லைக்கு புறப்பட்டு சென்றது.

 இதனிடையே இலங்கை அனுராதபுரம் சிறையில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 46 மீனவர்களை இன்று இலங்கை போலீசார் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். இலங்கை அரசின் உத்தரவுப்படி இன்று மாலைக்குள் விடுதலை செய்யப்படும் 46 தமிழக மீனவர்களும் நாளை ராமேஸ்வரம் திரும்புகின்றனர். ஆனால் மீனவர்களின் 18 படகுகள் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்ட 82 மீனவர்களும் விடுதலையாகி தமிழகம் திரும்பும் நிலையில் கடந்த 31ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 படகுகள் உட்பட இலங்கை வசமுள்ள 24 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரத்தில் இன்று காலை 10 மணியளவில் ஏராளமான மீனவர்கள் வாயில் கருப்புதுணி கட்டி ராமேஸ்வரம் வேர்கோடு புனித சூசையப்பர் சர்ச் முன்பிருந்து புறப்பட்டு  நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தனர். அங்கு இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்டுத்தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனுக்கொடுத்தனர்.

No comments:

Post a Comment