Saturday, April 12, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் தமது கொள்கைகளைத் திருத்திக் கொண்டால் இணையத் தயார்: பொதுபல சேனா!

Saturday, April 12, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது கொள்கைகளைத் திருத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுமாயின், அந்த கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளோம். 

இவ்வாறு பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கல கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளும் மற்றும் பெளத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கொள்கைகளை ஆராய்ந்து அவருக்கு எமது அமைப்பு தயக்கமின்றி ஆதரவு வழங்கும்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கொள்கைகளை ஆராய்ந்தே நாங்கள் ஆதரவு வழங்குவோம்.பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால், அவருக்குப் பின்னால், அரச சார்பற்ற குழுக்கள் இருக்கக் கூடும். கடந்த காலங்களில் தனி நபர்களின் அடையாளம் மற்றும் வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் ஆதரவு வழங்கினர். நாங்கள் வேட்பாளரின் கொள்கையை கவனத்தில் கொள்வோம்.
 
பெளத்த மதத்துக்கு முதன்மை இடத்தையும் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளும் எந்தத் தரப்பாக இருந்தாலும் நாங்கள் ஆதரவு வழங்குவோம். அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா என்பது முக்கியமல்ல. அவர்கள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சரியான பார்வையுடன் செயற்படும் நபருக்கும் நாங்கள் ஆதரவு வழங்கத் தயார். - என்றார். பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கல கொட அத்தே ஞானசார தேரர்

No comments:

Post a Comment