Pages

Thursday, April 10, 2014

பிரணாப் முகர்ஜி தலைமையில் விழா பிரதமர், அமைச்சர்கள் புறக்கணிப்பு!

Thursday, April 10, 2014
புதுடெல்லி::குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்ற நடைபெற்ற விழாவை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் புறக்கணித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களில் ஒரு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக 28 மெட்ராஸ் பட்டாலியன் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவர்களுக்கு பதிலாக நேற்று முதல் 8 ஜம்மு காஷ்மீர் பட்டாலியன் வீரர்கள் பாதுகாப்புக்கு வந்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரர்கள் மாற்றப்படுவர்.

அந்த சமயத்தில் பழைய வீரர்களுக்கு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படும். இதுவரை இந்த விழாவில் ராணுவ உயர்அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்வர். பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், ஜனாதிபதி மாளிகை நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். தனது பாதுகாவலர்களுக்கான பிரிவு உபசார விழாவை தனது தலைமையில் நடத்தவிரும்பினார். இதற்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் நடைபெற்றது. விழாவுக்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விழா பந்தலில் அவர்கள் அமர்வதற்காக அதிகார வரிசைப்படி நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. ஆனால் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் மன்மோகன்சிங் உள்பட மத்திய அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி பாதுகாப்புக்கு இந்த முறை ஜம்மு காஷ்மீர் பிரிவு வீரர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பாரூக் அப்துல்லா மட்டும் விழாவில் கலந்து கொண்டார். துணை ஜனாதிபதி அன்சாரி தனது  மனைவியுடன் கலந்து கொண்டார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வராத காரணத்தால் விழா பந்தலில் பல நாற்காலிகள் காலியாக இருந்தன. தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் விழாவுக்கு வரமுடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சுதந்திரத்துக்கு பின்னர் முதன் முறையாக ஜனாதிபதியின் பாதுகாப்பு வீரர்களுக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment