Pages

Friday, April 11, 2014

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் நாளை ஆலோசனை: கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்பு!

Friday, April 11, 2014
சென்னை::தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், சென்னையில் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நாடாளுமன்ற தேர்தல் கடந்த 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் 3 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வரும் 22ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சியினரும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஆளும்கட்சியினர் மீதும், அதிகாரிகள் மீதும் எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்களை கூறி வருகின்றன. புகார்களின் அடிப்படையில் டிஜிபி ராமானுஜம் மாற்றப்பட்டு தேர்தல் நடத்துவதற்காக பொறுப்பு டிஜிபியாக அனூப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தவிர சேலம், ஈரோடு, வேலூர் மாவட்ட கலெக்டர்கள், நாமக்கல் எஸ்பி ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல கலெக்டர்கள், எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் இன்று மாலை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அவரை வரவேற்கிறார். மாலையில் தேர்தல் அதிகாரிகளுடன் சம்பத் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நாளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.பின்னர்,
 
மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் மற்றும் தேர்தல் டிஜிபி மற்றும் தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் 1.24 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதில் 14 ஆயிரம் துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல்படையினர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் பூத்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்வது என்பது உள்பட பல்வேறு முடிவுகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படுகிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். அரசியல் பாகுபாடு காட்டக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. சமூக விரோதிகள், ரவுடிகள், தேர்தலை சீர்குலைக்கும் நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment