Pages

Thursday, April 10, 2014

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: களத்தில் மொத்தம் 845 பேர்!

Thursday, April 10, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் தமிழகம் முழுவதும் 845 பேர் களத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 107 வேட்பாளர்கள் மோதுகின்றனர். 
தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 24_ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 5_ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. 7_ம் தேதி அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
நீலகிரியில் பிஜேபியின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பாமக வேட்பாளர் மணிரத்தினத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட மணிரத்தினத்தின் மனைவி சீதா மணிரத்தினத்தின் வேட்பு மனு  ஏற்கப்பட்டது. 
மொத்தம் 906 மனுக்கள் தகுதி உள்ளவையாக இருந்தன. இதில் 845 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும் சுயேச்சையாக தாக்கல் செய்தவர்கனின் மனுக்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்ப்பட்டது. மாவட்ட வாரியாக அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் மனுக்கள் வாபஸ் முடிந்த பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரித்தனர். அப்போது சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்ப்பட்டது. 
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:_
 தமிழகத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1. 261 மனுக்களில், இறுதியாக 906 மனுக்கள் தகுதி வாய்ந்தவையாக இருந்தது. இதில் 61 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் இறுதியாக 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள் 789 பேரும், பெண்கள் 55 பேரும், ஒரு திருநங்கையும் அடங்குவர்.
ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நேற்று யாரும் மனு வாபஸ் பெறவில்லை. இறுதியாக 14 வேட்பாளர்கள் அதில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 12 பேர் ஆண்கள், 2 பெண்கள் ஆவர். இந்த விபரங்கள் மற்றும் வேட்பாளர் பட்டியல் விளக்கங்கள் இணையதளத்தில் www.elections.tn.gov.in/loksabha2014.htmகீசிஙி பார்க்கலாம்.
சென்னையை பொருத்தவரை மத்திய சென்னை தொகுதிக்கு 43 பேர் மனு செய்திருந்தனர். இதில் 23 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நேற்றும் நேற்றும் மத்திய சென்னையை பொறுத்த வரை யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. எனவே 20 பேர் இறுதி வேட்பாளராக களத்தில் இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். வடசென்னையில் மனுவாபஸ் முடிந்த பின்னர் 45 பேட்டியிடுகின்றனர். தென்சென்னையில் 42 பேரும் போட்டியிடுகின்றனர். மொத்தம சென்னையில் 107 பேர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் 30 பேர்: புதுச்சேரி தொகுதியில் மொத்தம் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 30 மனுக்கள் ஏற்கப்பட்டன. 
தமிழக வேட்பாளர் இறுதி பட்டியல் ;
மொத்தம் 87 சின்னம் ஒதுக்கீடு
பிற்பகல் 3மணிக்கு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட் டபின்னர் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும்,  மேலும் 4 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒரே சின்னம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் சுயேட்சைகளுக்காக மொத்தம் 87 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வேட்பாளர்கள் 3 தவணையாக தேர்தல் செலவை தாக்கல் செய்யலாம். இது குறித்து அனைத்து வேட்பாளர்களுடன் இன்றுஆலோசனை நடத்தப்படும். விதி மீறல் தொடர்பாக தொலைபேசி மூலம் இதுவரை 8 ஆயிரத்து 615 புகார்கள் வந்துள்ளன. 
இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெறும். 
வாக்காளர்களுக்கு அழியாத மை வைப்பதற்கு வசதியாக மைசூரில் இருந்து தருவிக்கப்படும். தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அறிக்கும் பணி விரைவில் தொடங்கும். 
தேர்தலில் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்படும்.
தேர்தல் நேர்மையுடன் நடைபெறுவதற்கு வசதியாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக வெளி மாநில போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்துள்ளனர். தேர்தல் பார்வையாளர்களும் தங்கள் தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொடங்கினர் என்றார்.

No comments:

Post a Comment