Pages

Friday, April 25, 2014

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

Friday, April 25, 2014
புதுடெல்லி::முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த தாமதத்தை காரணம் காட்டி தங்களை விடுவிக்கும்படி மூன்று பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
அந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது மத்திய அரசு தாமதமாக முடிவு எடுத்ததாக கூறி, அவர்களது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
 
அதில், ‘‘சிறை விதிகளுக்கு உட்பட்டு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. சட்டசபையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க காலக்கெடுவும் விதித்தார்.
 
தமிழக அரசின் நடவடிக்கைகளால் கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, அதற்கு ஆட்சேபம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் 20–ந்தேதி இடைக்கால தடை விதித்தது.
 
இதையடுத்து மத்திய அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணை நடந்தது. அப்போது ‘‘ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் பயங்கரவாதிகள். மத்திய அரசு அனுமதி இல்லாமல் அவர்களை தமிழக அரசால் விடுதலை செய்ய இயலாது. இதில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது’’ என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
 
இது தவறான வாதம்’’ என்று தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு வக்கீல் வாதாடுகையில், ‘‘பயங்கரவாத வழக்கு என்பதால் மத்திய அரசிடம் மாநில அரசு கருத்தையோ, யோசனையையோ கேட்கலாம். ஆனால் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்பதான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என் சொல்ல முடியாது’’ என்றார்.
 
கைதிகள் சார்பிலும் இதே போன்று வாதிடப்பட்டது. கடந்த மாதம் 27–ந்தேதி இந்த விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சதாசிவம் தீர்ப்பை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:–
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரின் விடுதலை வழக்கில் மிகவும் விரிவாக விசாரணை தேவைப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
 
இது போன்ற வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு முதன் முதலாக எதிர்கொள்கிறது. 7 பேர் மனு மீது 7 விதமாக தீர ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது. எனவேதான் இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது.
 
5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு இந்த வழக்கை விசாரிக்கும். 3 மாதங்களில் இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை மீண்டும் தள்ளிப் போய் உள்ளது. அவர்கள் ஜெயிலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment