Friday, April 4, 2014

அமெரிக்க ராணுவ முகாமில் வீரர் சரமாரி துப்பாக்கிச் சூடு4 பேர் பலி, 16 பேர் படுகாயம்!!

Friday, April 04, 2014
டெக்சாஸ்:அமெரிக்காவில் போர்ட் ஹூட் ராணுவ முகாம் மீது சக வீரர் ஒருவர் நேற்று திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். துப்பாக்கி சூடு நடத்திய வீரரும் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போர்ட் ஹூட்டில் ராணுவ முகாம் உள்ளது. எப்போதும் பலத்த பாதுகாப்புடன் உள்ள போர்ட் ஹூட் முகாமில் நேற்று காலை ராணுவ உடை அணிந்து மர்ம ஆசாமி ஒருவன் உள்ளே புகுந்தான். திடீரென அங்கிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து மையத்தில் இருந்த 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். சுதாரித்து கொண்ட ராணுவத்தினர் பதிலுக்கு திருப்பி சுட்டனர். அதில் மர்ம ஆசாமியும் பலியானான். தகவல் அறிந்து ராணுவ முகாமில் போலீசார், எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு ஏஜென்சியினர் போர்ட் ஹூட் பகுதியில் குவிந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், போர்ட் ஹூட் முகாமுக்கு சீல் வைக்கப்பட்டது.விசாரணையில் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தியது ராணுவ வீரர் இவான் லோபஸ் என்று தெரிய வந்தது. இவர், கடந்த 2011ம் ஆண்டு ஈராக்கில் 4 மாதங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினார். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை வழங்கி வந்ததாக தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் போர்ட் ஹூட் ராணுவ முகாமில் இருந்த வீரர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அவர்கள் முகாமுக்கு வெளியில் முற்றுகையிட்டனர். பலர் பேஸ் புக், டுவிட்டரில் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை அறிய முயற்சித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.'முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று லெப்டினன்ட் ஜெனரல் மார்க் மிலே திட்டவட்டமாக கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடந்த போது சிகாகோவில் இருந்த அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில், 'இதுபோன்ற சம்பவம் கவலை அளிக்கிறது. ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அடிமட்ட அளவில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறினார்.கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இதே போர்ட் ஹூட் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மேஜராகவும் மனநல மருத்துவராகவும் இருந்த நிடால் மாலிக் ஹசன் என்பவர், திடீரென சக வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். போர்ட் ஹூட் ராணுவ முகாமில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக் நாட்டுக்கும் புறப்பட்ட வீரர்கள் தயாராகி கொண்டிருந்தனர். அவர்களுக்கு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. அந்த நேரத்தில் வீரர்கள் மீது மேஜர் நிடால் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.அதன்பின், நிடால் கைது செய்யப்பட்டார். ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் நிடாலுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலுக்கு பிறகு இப்போது மீண்டும் போர்ட் ஹூட் முகாமில் சக வீரரே துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment