Pages

Sunday, April 13, 2014

தமிழக பகுதியில் நுழைந்து ஆந்திர மீனவர்கள் அட்டூழியம்: 100 குடிசைகள் தீ வைத்து எரிப்பு:தாக்குதல் நடத்திய ஆந்திர மீனவர்கள் 14 பேர் கைது!

Sunday, April 13, 2014
சென்னை: தமிழக மீனவ கிராமம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆந்திர மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லை தாலுகாவான பொன்னேரி அடுத்த மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பூங்குளம் ஊராட்சியில் சின்ன மாங்கோடு குப்பம், பெரிய மாங்கோடு குப்பம், புதுக்குப்பம் ஆகியவை தமிழக எல்லையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்கள். அதேபோல் ஆந்திர எல்லையை ஒட்டி ஆரம்பாக்கம் அருகேயுள்ள நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், பூண்டிக்குப்பம், காசாங்காடு, பெரியவேடு குப்பம், ஓட்டாம்பேடு, வடகோடி, தடா, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 24 மீனவ கிராமங்கள் உள்ளன.இவர்களுக்கு இடையில் பழவேற்காடு எல்லையில் மீன் பிடிப்பதில் தொடர்ந்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில்
 
நேற்று காலை 100க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திடீரென வந்து சின்ன மாங்கோடு குப்பம் கரையில் நிறுத்திவிட்டு ஓடிவந்தனர். ஈட்டி, கத்தி, அரிவாள், கையெறி குண்டு, பெட்ரோல் குண்டு மூலம் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். அதை பார்த்த சின்ன மாங்கோடு குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிர் தப்புவதற்காக, தேவம்பேடு கிராமத்தை நோக்கி ஓடினர். ஆந்திர மீனவர்கள் இரு பிரிவாக பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் போலீசாரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், எஸ்ஐ காமராஜ் மற்றும் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். சின்ன மாங்கோடு கிராமத்துக்கு சென்ற மற் றொரு ஆந்திர மீனவ கும்பல், அங்குள்ள 100 குடிசைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தீ வைத்தனர். மாடி வீடுகளை சேதப்படுத்தினர். மீன்பிடி படகுகள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த மோதலில் காயமடைந்த போலீசார் சென்னையில் உள்ள தனியார்
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் நடந்த மீனவ கிராமங்களில் போலீசார் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆந்திர மாநில எல்லை கிராமங்களான பீமார்பாளையம், ராமாபுரம் குப்பம், பாட்டை குப்பம், பாலாகிருஷ்ணாபுரம், நொச்சிகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வெங்கடேசன், குமார், மகாதேவான், சுமன், சந்தானம், சண்முகம், குள்ளன், தாஸ், நயினார், கொள்ளாபுரி, ஜானகிராமன், சுகுமார், தனபால் ஆகியோரை தமிழகத்தின் ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று நள்ளிரவு நொச்சி குப்பத்தை சேர்ந்த குப்பன் (57) என்பவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கிராமங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அங்கிருந்த பதற்ற நிலை சற்று குறைந்து வருகிறது. உடைமைகளை இழந்த மீனவர்களுக்கு உணவு, உடை போன்றவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கிராமங்களின் பாதுகாப்புக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

No comments:

Post a Comment