Tuesday, February 11, 2014

ராஜ்யசபாவில் அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.,க்கள் ரகளை: காகிதம் கிழிப்பு, மைக் உடைப்பால் சபை ஒத்திவைப்பு!

Tuesday, February 11, 2014
சென்னை::அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி காரணமாக, ராஜ்யசபாவில் நேற்று, வரலாறு காணாத, ரகளை ஏற்பட்டது. சபைத் தலைவர், ஹமீத் அன்சாரி முன் இருந்த, மைக்குகள் உடைக்கப்பட்டன. அலுவல் குறிப்பேடுகள் கிழிக்கப்பட்டு, சபையில் பறக்க விடப்பட்டதால், ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

குளிர்கால கூட்டத்தொடருக்காக, கடந்த, 5ம் தேதி, பார்லிமென்ட் கூடியது. துவங்கிய நாளில் இருந்து, தமிழக மீனவர்கள் பிரச்னையை விவாதிக்க வேண்டுமென, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகளின், எம்.பி.,க்கள் கோரி வருகின்றனர்.இரு கட்சிகளுமே, இது குறித்து விவாதிக்க, தினமும், 'நோட்டீஸ்' அளித்த போதிலும், சபைத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், ஒவ்வொரு நாள் காலையிலும், சபையின் மையப்பகுதிக்குச் சென்று, தமிழக, எம்.பி.,க்கள், குரல் எழுப்பி வந்தனர்.

குற்றச்சாட்டு :
இந்நிலையில், 'விதிமுறைகளை மீறி, சபையின் நடவடிக்கை களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளும், எம்.பி.,க்கள்' என, தமிழக எம்.பி.,க்கள் மற்றும் சில ஆந்திர எம்.பி.,க்களின் பெயர்களை, ராஜ்யசபா அலுவலகம் நேற்று வெளியிட்டது. அந்த அலுவல் குறிப்பேட்டில், அ.தி.மு.க., வின், ஐந்து எம்.பி.,க்கள்; தி.மு.க.,வின், மூன்று எம்.பி.,க்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.இந்த குறிப்பேடு வெளியானதை அடுத்து, காலையில், ராஜ்யசபா துவங்கியதும், பெரும் அமளியில், தமிழக, எம்.பி.,க்கள் இறங்கினர். சபைத் தலைவர், ஹமீத் அன்சாரியுடன், கடும் வாக்குவாதத்தில் இறங்கினர்.'தமிழக மீனவர்கள் பிரச்னையை, மத்திய அரசு, அலட்சியம் செய்கிறது. எங்களது உரிமைகளுக்காக, குரல் கொடுத்தால், அதை, விதிமுறை மீறல் என்பதா? நாங்கள், எந்த தவறும் செய்யாத போது, எதற்காக, குற்றம் செய்ததாக, நோட்டீஸ் போட்டுள்ளீர்கள்' என, அவர்கள் ஆவேசமாகக் கேட்டனர்.

செவி சாய்க்க மறுப்பு:
அவர்களை, இருக்கைகளுக்கு திரும்பும்படி, அன்சாரி, பல முறை கேட்டும், தமிழக, எம்.பி.,க்கள், செவி சாய்க்க மறுத்து விட்டனர்.'எங்கள் மீது சுமத்தப்பட்ட, அபாண்ட குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும். அவ்வாறு செய்யாத வரை, சபையை நடத்த விட மாட்டோம்' என, உறுதியாகக் கூறினர்; கோஷங்களை தொடர்ந்தனர். 'அமைதியாக இருங்கள்; இருக்கைக்கு திரும்புங்கள்' என்ற, பிற கட்சி, எம்.பி.,க்களின் சமாதானங்களை, தமிழக, எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை. இவற்றை பொருட்படுத்தாமல், சபையை, சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி தொடர்ந்து நடத்த முயன்ற போது, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், அதிரடியாக, சபைத் தலைவர் முன்பிருந்த
 
மைக்குகளை, வளைத்து உடைத்தார்.இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. காலை, 11:15 மணிக்கு, ஒத்தி வைக்கப்பட்ட சபை, உடனடியாக, மீண்டும் 12:00 மணிக்கு கூடியது. அப்போதும், ரகளை ஏற்படவே, 12:15 வரை, ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும், அமளி நிற்கவில்லை.

குரியன் உறுதி:
மதிய உணவு இடைவேளையின் போது, அரசு சார்பில், மத்திய, காங்கிரஸ் அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், ராஜ்ய சபா வந்து, மைத்ரேயனுடன் சமாதானம் பேசினார். ராஜ்யசபா துணைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பி.ஜே.குரியனும், சபைக்கு வந்து, வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்.அதற்கும் உடன்படாத, மைத்ரேயன்,"குரியன் கூறுவதை ஏற்க முடியாது. சபைத் தலைவர், ஹமீத் அன்சாரி, சபைக்கு வந்து, வருத்தம் தெரிவித்து, எங்கள் மீதான களங்கத்தை, துடைக்க வேண்டும்; அதுவரையில், சபையை நடத்த விட மாட்டோம்,” என்றார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, சபை கூடிய போது, தமிழக, எம்.பி.,க்கள், தங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். 'எங்கள் மீதான, குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.

அப்போது, திடீரென, தி.மு.க., - எம்.பி., செல்வகணபதி, அலுவல் குறிப்பேடு காகிதங்களை, சுக்குநூறாக கிழித்து, பிரதமர், மன்மோகன் சிங் வழக்கமாக அமரும் இருக்கையின் முன், வீசியெறிந்தார். அப்போது, அந்த இருக்கையில், பிரதமர் இல்லை.காலையில், 'மைக்'கை உடைத்த, மைத்ரேயன், இம்முறை, சபைத் தலைவர் மேஜை முன் இருந்த, பேனாக்களை பிடுங்கி, வீசி எறிந்தார். களேபரங்கள் அதிகரித் ததை கண்ட, சபைத் தலைவர், சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
உரிமை இல்லையா?
பின், நிருபர்களிடம் பேசிய மைத்ரேயன்,
 
மீனவர்கள், தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கின்றனர். அது குறித்து பேச வேண்டுமென கேட்க, எங்களுக்கு உரிமை இல்லையா? குரல் கொடுத்தால், குற்றவாளிகளா? மீனவர்கள் பிரச்னைக்காக, குரல் கொடுப்பது, குற்றம் என்றால், அந்த குற்றத்தை, திரும்ப திரும்ப செய்வோம்!” என்றார்.
செல்வகணபதி கூறுகையில்,
 
உ.பி., மற்றும் பீகார், எம்.பி.,க்கள், சபையில், எவ்வளவோ, ரகளை செய்கின்றனர். இதுவரை, 400 மீனவர்கள் இறந்துள்ளனர். செவிடனாக இருக்கும் மத்திய
 
அரசை, தட்டி எழுப்ப, குரல் கொடுத்தால், குற்றவாளியாக்குவரா? தமிழக, எம்.பி.,க்களை மட்டும், குறிவைத்து, களங்கப்படுத்தலாம் என, தப்புக்கணக்கு போட்டால், விளைவுகள் விபரீதமாகும்,” என்றார்.லோக்சபாவிலும், இது போன்ற அமளிகளால், சபை பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, பின், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 'தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது' என, அங்கு,ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

அமளி கூடாது; இணக்கம் வேண்டும்-சொல்கிறார் ஜனாதிபதி பிரணாப்:
 
விவாதங்கள் நடத்தி, சட்டங்களை இயற்றி, மக்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கச் செய்வதற்காகத் தான், பார்லிமென்ட் கூடுகிறது. பார்லிமென்டில் அமளி நீடித்து, அலுவல்கள் மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.இதை சரி செய்ய, என்ன செய்ய வேண்டும் என்பதை, அனைவரும் அமர்ந்து பேசி, முடிவு செய்ய வேண்டும். பார்லிமென்ட் ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசு, அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து, கலந்து பேசி, தக்க முடிவு காண
 
வேண்டும்.ஜனநாயகத்தின் கங்கோத்ரி, பார்லிமென்ட். அதாவது, கங்கை உற்பத்தியாகும், கங்கோத்ரி போல், ஜனநாயகம் தோன்றுமிடம் பார்லிமென்ட். நூறு கோடி மக்களின் குரல் ஒலிக்கும் இடமாக பார்லிமென்ட் விளங்க வேண்டும்.கங்கோத்ரியே அசுத்தமாகிவிட்டால், கங்கை நதியும், அதன் கிளை நதிகளும் அசுத்தமாகிவிடும். அதுபோல், பார்லிமென்ட் அசுத்தமாகிவிட்டால், ஜனநாயகமே அசுத்தமாகிவிடும். எனவே, பார்லி மென்டின் கண்ணியத்தையும், உயர்ந்த நிலையையும் அனைவரும் காக்க வேண்டும்.டில்லியில் நேற்று நடந்த, நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment