திருச்சி::திமுக மாநில மாநாடு திருச்சியில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி, திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே திருச்சி வந்தனர். தொண்டர்கள் தற்போதே குவியத் துவங்கியுள்ளனர்.திமுகவின் 10வது மாநில மாநாடு நாளை திருச்சியில் தொடங்குகிறது. இதற்காக திருச்சி பிராட்டியூரில் 250 ஏக்கரில் பிரமாண்ட மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணியளவில் மாநாட்டு திடலின் முன் பகுதியில் ராமஜெயம் நினைவு கொடிமேடையில் 90 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக தலைவர் கருணாநிதி கொடியேற்றுகிறார்.
பொதுச்செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைக்கிறார். கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மாநாட்டு பந்தலின் முன் சீருடை அணிந்த திமுக இளைஞரணி, மகளிர் அணியினர் 1000 பேர் திமுக கொடியுடன் பேண்ட் வாத்தியம் இசைத்து அணிவகுப்பு நடத்தி வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 2 நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இதற்காக 1100 அடி நீளம், 600 அடி அகலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடை 200அடி நீளம், 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கு வாசுகி முருகேசன் பெயரிடப்பட்டு உள்ளது. மேடை கான்கிரீட் கட்டிடத்தாலும், மரவேலைப்பாடுகளுடனும் நாடாளுமன்றம் போல அமைக்கப்பட்டு உள்ளது.காலை 11 மணிக்கு திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், வரவேற்புகுழு தலைவருமான கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார். நாளை இரவு 8 மணிக்கு அன்பழகன் சிறப்புரையுடன் முதல்நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.
2ம் நாள் மாநாடு 16ம் தேதி(ஞாயிறு) காலை 9 மணிக்கு நாகூர் அனீபா மகன் நவுசாத் அலி இன்னிசையுடன் தொடங்குகிறது. 10 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பேசுகிறார்கள். 11 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. 12 மணிக்கு மாநாட்டுக்கு தலைமையேற்க கருணாநிதியை, முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பலர் பேசுகிறார்கள். பின்னர் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மாலை 3 மணிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உரையுடன் மாநாடு தொடங்குகிறது. இரவு 8 மணி அளவில் கருணாநிதி நிறைவுரையுடன் 2 நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.
மாநாட்டையொட்டி திருச்சி நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் திமுக கொடி, தோரணங்கள், மின்விளக்கு அலங்காரங்கள் கட்அவுட்கள், ராட்சத பலூன்கள், சுவர் விளம்பரங்கள் என காட்சி அளிக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இரவு 10 மணிக்கு மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா வந்தார். அங்கு அவருக்கு நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் நேற்று இரவு விமானத்தில் திருச்சி வந்தார். அவர் 7.45 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வந்து அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஒரு மணி நேரம் சுற்றி பார்த்தார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முக்கிய பிரமுகர்கள், தலைமை கழக நிர்வாகிகள் இன்று திருச்சி வந்து விட்டனர். இதற்காக நகரில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொண்டர்கள் தற்போதே குவியத் துவங்கிவிட்டனர்.
இதுவரை நடந்த மாநாடுகளில் இதுபோன்ற பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதில்லை. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டு திடலில் தங்குவதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பந்தலில் தொண்டர்கள் அமரும் இடத்தில் 1000 மின்விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பந்தலுக்குள் 5 லட்சம் தொண்டர்கள் அமரவும், பந்தலுக்கு வெளியே 5 லட்சம் தொண்டர்கள் திரளும் அளவுக்கும் பிரமாண்டமான இடம் உருவாக்கப்பட்டு உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவுக்கு திருப்புமுனை மாநாடாக அமையும் என்று கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment