Pages

Saturday, February 15, 2014

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட நிபுணர்குழு!

Saturday, February 15, 2014இலங்கை::காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பிலான பிணக்குகளை தீர்ப்பதற்காக விசேட நிபுணர்குழு ஒன்றும் செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணவிதான தெரிவித்துள்ளார்.
 
நேற்று யாழ்ப்பாணம் வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பிலான பிணக்குகளை தீர்ப்பதற்காக விசேட நிபுணர் குழு ஒன்று செயற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த குழு தொடர்பிலான மேலதிக தகவல்களை வெளியிட மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.
 
நேற்று முற்பகல் தொடக்கம் மாலை வரை நடைபெற்ற சாட்சியங்கள் பதிவு நடவடிக்கையில் 49 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று புதிதாக சாட்சியமளிக்க வருகைதந்த 93 பேர் பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்களிடம் சாட்சியங்கள் பெறப்படவில்லை. அவர்களுக்கான விசாரணை பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment