Thursday, February 06, 2014
இலங்கை::தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல்
செய்யும் இறுதி தினம் இன்றாகும். அதற்கமைய இரு மாகாண சபைகளுக்குமான
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேல் மாகாணத்தின் அனைத்து
மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்தது.
அதற்கமைய இன்றைய தினம் தென் மாகாண தென் மாகாண வேட்புமனுக்களை அக்கட்சி
தாக்கல் செய்யவுள்ளது. இதேவேளை மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திற்கு
மாத்திரமே இதுவரை ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்றைய தினம் அக்கட்சி ஏனைய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல்
செய்யவுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணியுடன் மேல் மற்றும் தென் மாகாண சபை
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் 6
மாவட்டங்களிலும் இதுவரை 55 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக
பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சை குழுக்களுக்கான
கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நேற்று நண்பகல் 12.00 மணியுடன்
நிறைவடைந்தது.
அதற்கமைய இம்முறை தென் மற்றும் மேல மாகாண சபை தேர்தலில்
போட்டியிடுவதற்கென 49 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் இறுதி நொடிப்பொழுது வரை காத்திருக்காமல்
முன்கூட்டியே வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு பிரதி தேர்தல்கள் ஆணையாளர்
வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் சுயேட்சை குழுக்களுக்கான தேர்தல் சின்னங்களை
வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண தெரிவத்தாட்சி அலுவலகத்தில்
இடம்பெறவுள்ளது.
இதில் சுயேட்சை குழு தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment