Sunday, February 09, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்தபோதிலும், நாம் தொடர்ச்சியாக நாம் ஏமாற்றப்பட்டே வருகின்றோம் என பருத்தித்துறை மரக்கறி வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (9) இடம்பெற்ற
கலந்துரையாடலின் போதே வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பருத்தித்துறை நகரப் பகுதியில் அமையப் பெற்றுள்ள அங்காடியின் மேற்தளத்தில் மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், தமது வியாபார நடவடிக்கைகளின் போது தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவர்களிடம் எடுத்து விளக்கினர்.
குறித்த அங்காடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கடைத்தொகுதியும், மேல்தளத்தில் மரக்கறி கடைத் தொகுதியும் இருப்பதனால் நோயாளர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில், தமக்கு கீழ்தளத்தில் மரக்கறி கடைத்தொகுதிகளை அமைத்து தருமாறு நகரசபைத் தலைவரிடம் தாம் கோரியிருந்தபோதிலும், அதுவிடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தாத நகரசபைத் தலைவர் தமது கோரிக்கைக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் மரக்கறி வர்த்தகப் பிரதிநிதிகள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமக்கு நியாயத்தின் அடிப்படையில் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த பிரதிநிதிகள், தேர்தல் காலங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வழங்கப்படுகின்ற அவர்களது பொய்யான பரப்புரைகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த போதிலும், எமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் அவர்களால் எதையும் பெற்றுத்தர முடியவில்லையென்றும், நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகின்றோம் சுட்டிக்காட்டினர்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தரும் வரையில், மாற்று ஏற்பாடாக சந்தைக்கு அருகாமையிலுள்ள காணியில் தற்காலிகமாக மரக்கறி சந்தையை நடத்துவதற்கும், வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் அசௌகரியங்கள் ஏற்பாடாத வகையில் நியாயத்தின் அடிப்படையில் தீர்வு பெற்றுத் தரப்படுமென்றும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் எமது கோரிக்கைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில், குறித்த அங்காடிக்கான கட்டிடத்தின் அமைப்பானது கீழே மரக்கறி வர்த்தகத்தையும், மேலே கடைத்தொகுதியையும் கொண்டமைந்ததாக அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், வர்த்தகர்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
அத்துடன், நகரசபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெவ்வேறு பெயர்களில் குறித்த அங்காடியில் கடைகளை பெற்றுள்ளதாகவும், இதன்காரணமாகவே மரக்கறி வியாபாரிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment