Thursday, February 13, 2014

நாளை காதலர் தினம்: கடற்கரை–பூங்காக்களில் திரளும் காதல் ஜோடிகள்!!!

Thursday, February 13, 2014
சென்னை::நாளை காதலர் தினம். இதன் கொண்டாட்டங்கள் நாடு முழுவதுமே களை கட்டியுள்ளன. இந்த நாளில் காதலர்கள் தங்களுக்கிடையே பரிசுப் பொருட்களை கொடுத்து முத்தமழை பொழிவார்கள். பொழுது போக்கு பூங்காங்கள் கடற்கரைகளிலும் நாளை கூடும் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் (70 டன்னில் இருந்து 100 டன்னாக) வரத்தும் அதிகரித்துள்ளது. சிவப்பு ரோஜாக்களுக்கு எப்போதுமே காதலர்கள் மத்தியில் மவுசு அதிகம்.
 
இதன் விலை 2 மடங்காக அதிகரித்துள்ளது. 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பூவின் விலை இன்று 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எப்போதுமே எதிர்ப்பு அதிகம். இதனால், இங்கு காதலர் தின கொண்டாட்டங்கள் வெளிப்படையாக நடத்தப் படுவதில்லை. வசதி படைத்த காதலர்கள் நட்சத்திர ஓட்டல்களிலும், நடுத்தர வர்க்க காதலர்கள் தியேட்டர், பூங்காக்களிலும் தங்களது கொண்டாட்டத்தை வைத்துக் கொள்வார்கள்.
 
தமிழகத்தில் இந்து அமைப்பினர் காதலர் தினத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருவதுடன், ஒவ்வொரு ஆண்டும் மஞ்சள் கயிறுகளை கையில் ஏந்தியபடியே வலம் வர தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் காதலர்களுக்கு பொது இடத்தில் வைத்தே இவர்கள் திருமணமும் செய்து வைத்தனர்.
 
இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காதலர் தினத்துக்கு எதிரான போராட்டகளும் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த ஆண்டும் இந்து அமைப்பினர் சிலர் மெரினாவில் மஞ்சள் கயிறுகளுடன் காத்திருந்தனர். ஆனால் காதலர்கள் யாரும் சிக்கவில்லை.
 
இதுபோன்ற காரணங்களால், காதலர் தினத்தன்று பொது இடங்களில் கூடி கும்மியடிக்கும் காதலர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. இவர்கள் காதலர் தினத்தன்று மறைந்திருந்தே பீதியுடன் காதலிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
 
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், காதல் என்ற பெயரில் தற்போது நடை பெறும் கும்மாளங்களும் கூத்துமே நம் கண் முன்னே வருகின்றன.
 
மனசும்... மனசும் சேர்ந்து காதலித்த காலம் மலையேறி விட்டது.
இன்று காதலில் மனசை விட காமமே தலை தூக்கி இருக்கிறது.
 
காதல் போர்வையில், பொது இடங்களில் காதலர்கள் அத்துமீறுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. குறிப்பாக வெட்டவெளியில் கடற்கரையில் சூடு பறக்கும் மணல் பரப்பில் அமர்ந்த படி சுகம் காணும் ஜோடிகளே இன்று மெரினா கடற்கரையின் அடையாளமாக மாறிப் போனது. இது ஒருபுறமிருக்க கள்ளக்காதல் விவகாரங்களால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்து சின்னா பின்னமாகியுள்ளன. அதே நேரத்தில் சத்தமில்லாமல் காதல் கவுரவ கொலைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்தால் என்ன நடக்கும் என்பதை இளவரசன்–திவ்யா காதல் நமக்கு உணர்த்தியது.
 
இப்படி, காதலால் தமிழ் சமூகமே பிளவுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காதல் என்ற பெயரில் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இப்படி எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காதல் என்றும் சாகாது என்பது உணர்த்தும் வகையில் எல்லா திசைகளிலுமே காதலர்கள் நிறைந்து இருக்கிறார்கள்.
 
அறிந்து... புரிந்து.... காதலிப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். அறியாமல்... புரியாமல் காதலிப்பவர்கள் (படிக்கிற காலத்தில் மலரும் காதல்) தோற்றுப் போகிறார்கள். நல்ல காதலர்களை நாமும் காதலிப்போம் கள்ளகாதலர்களை வேறருப்போம். 

No comments:

Post a Comment